112 தொகுதிகளை கைப்பற்றுவோம் – தேசிய முன்னணி நம்பிக்கை

பெரா, நவ.14-

இம்மாதம் 19ஆம் தேதி நடைபெறவிருக்கும் நாட்டின் 15ஆவது பொதுத் தேர்தலில் தேசிய முன்னணி 112 இடங்களைப் பிடித்து குறுகிய பெரும்பான்மையில் ஆட்சி அமைக்கும் என பிரதமர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப் நம்பிக்கை தெரிவித்தார்.

நேற்று தேசிய முன்னணி, அம்னோவின் முக்கியத் தலைவர்களுடன் நடைபெற்ற விளக்கமளிப்பு கூட்டத்திற்கு பின்னர் அம்னோ உதவித் தலைவருமான அவர் சொன்னார்.

நாடு முழுவதுமுள்ள தேசிய முன்னணி எந்திரங்களிடமிருந்து கிடைக்கப் பெற்ற தகவலின்படி, மலாய்க்காரர் அல்லாத வாக்காளர்கள் உட்பட நாட்டு மக்களிடமிருந்து முழுமையான ஆதரவு கிடைத்துள்ளதைத் தொடர்ந்து தாம் இவ்வாறு நம்பிக்கை கொண்டுள்ளதாக அவர் சொன்னார்.

நேற்று 5 முக்கியத் தலைவர்களுடன் கூட்டம் நடத்தியபோது, தேசிய முன்னணிக்கு போதுமான ஆதரவு கிடைத்துள்ளது தெரிய வந்தது என்றார்.

நாம் முன்னிலை வகித்து வருவதால், இம்மாதம் 19ஆம் தேதி நடைபெறவிருக்கும் பொதுத் தேர்தலில் தேசிய முன்னணி 112 இடங்களைப் பிடித்து குறுகிய பெரும்பான்மையில் ஆட்சி அமைக்கும் என்று அவர் சொன்னார்.

நேற்று கோல பெராவிலுள்ள கம்போங் பத்து போர் மக்களுடான சந்திப்புக்கு பின்னர் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் குவாய் சட்டமன்றத் தொகுதியின் தேசிய முன்னணி வேட்பாளர் டத்தோ சபாரியா சைடானும் கலந்து கொண்டார்.

சபா, சரவாக்கிலுள்ள கட்சிகளிடமிருந்தும் போதுமான ஆதரவு கிடைக்கும் எனவும் அவர் சொன்னார்.

நாட்டில் தற்போது கட்சித் தாவல் தடை சட்டம் அமலுக்கு வந்து விட்டாலும்கூட, நாட்டில் வலுவான, நிலையான ஆட்சி அமைய வேண்டும் என பெரா நாடாளுமன்றத் தொகுதியின் தேசிய முன்னணி வேட்பாளருமான அவர் சொன்னார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here