துன்பங்களை அகற்றும் கால பைரவாஷ்டமி

சிவபெருமானின் 64 வடிவங்களில்  முக்கியத்துவம் வாய்ந்ததாகவும், சிவாலயம் தோறும் தனிச் சன்னிதியில் அருள்பாலிப்பவராகவும் இருப்பவர், பைரவர். இவரை தேய்பிறை அஷ்டமி நாளில் வழிபாடு செய்வது மிகவும் சிறப்புக்குரியது. தாருகாசுரன் என்ற அரக்கன், சிவபெருமானை நினைத்து தவம் இயற்றினான். அவனது தவத்திற்கு மகிழ்ந்து சிவபெருமான் அங்கு தோன்றினார். அப்போது அந்த அரக்கன், “பெண்களைத் தவிர வேறு யாராலும் தனக்கு அழிவு ஏற்படக்கூடாது” என்று வரம் கேட்டான்.

சிவபெருமானும் அவனுக்கு அந்த வரத்தை அருளினார். பிறப்பால் மென்யானத் தன்மை கொண்ட பெண்களால் தனக்கு இறப்பு இல்லை என்று கருதிய தாருகாசுரன், மூவுலகையும் கைப்பற்றி, அங்கிருந்த தேவர்களையும், மகரிஷிகளையும் துன்புறுத்தினான். அந்த துன்பத்தில் இருந்து காத்தருளும்படி, அனைவரும் சிவபெருமானிடம் முறையிட்டனர்.

சிவபெருமான் பார்வதியை நோக்க, அந்த தேவியின் வடிவமாக ‘காளி’ தோன்றினாள். காளிதேவி, தாருகாசுரன் இருந்த திசை நோக்கி பார்த்ததும், அந்த பார்வையின் வெப்பத்திலேயே அந்த அசுரன் பொசுங்கிப்போனான். பின்னர் காளிதேவியையும், அவள் வெளியிட்ட வெப்பத்தையும், சிவபெருமான் தனக்குள் இழுத்துக் கொண்டார். காளியில் உடலில் இருந்து வெளிப்பட்ட வெப்பத்தை சிவபெருமான் விழுங்கியதும், அதில் இருந்து எட்டு குழந்தைகள் வெளிப்பட்டனர்.

அவர்களை ஒன்றாக்கிய சிவபெருமான், அவருக்கு ‘பைரவர்’ என்று பெயரிட்டார் என்று புராணக் கதை ஒன்று சொல்கிறது.  அந்த பைரவரை, தன்னுடைய காவல் தெய்வமாக சிவபெருமான் நியமித்தார். பைரவரை அஷ்டமி திதிகளில், அதுவும் தேய்பிறை அஷ்டமியில் வழிபடுவது சிறப்பு. அன்றைய தினம் அஷ்ட லட்சுமிகளும், பைரவரை வணங்குவதாக சாஸ்திரங்கள் சொல்கின்றன.

பைரவர் தன்னுடைய உடலில் பூணூலாக ராகு-கேது ஆகிய பாம்பு கிரகங்களை அணிந்திருக்கிறார். சந்திரனை தலையில் சூடியுள்ளார். சூலம், மழு, பாசம், தண்டம் ஆகியவற்றை ஏந்தியபடி காட்சி தருகிறார்.    அஷ்டமி தேய்பிறை நாளானது, செவ்வாய்க்கிழமையில் வருவது சிறப்பாகும். அன்றைய தினம் பைரவரை வணங்கினால், கடன் தொல்லை நீங்கும் என்று நம்பப்படுகிறது.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here