டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம், தனது எதிர்கால அமைச்சரவையில் அங்கம் வகிக்கும் யாரேனும் தங்கள் சொத்துக்களை அறிவிக்கவில்லை என்றால் அவர்களை வெளியேற்றி விடுவதாக உறுதியளித்துள்ளார்.
15ஆவது பொதுத் தேர்தலில் அவர்களுக்கு வாக்களிக்க வேண்டுமா என்பதை முடிவு செய்வதற்கு முன், வேட்பாளர்களின் நிதிப் பின்னணி மற்றும் சொத்துக்களை அறிந்து கொள்வது அவசியமான தகவல் என்று பிகேஆர் தலைவர் மேலும் கூறினார்.
அனைத்து பக்காத்தான் ஹராப்பான் வேட்பாளர்களும் தங்கள் சொத்துக்களை அறிவிக்க வேண்டியிருந்தது. ஆனால் சிலர், முக்கியமாக தேசிய முன்னணியில் இருப்பவர்களின் நிதி நிலை என்னவென்று எங்களுக்குத் தெரியாது.
நான் பிரதமரானால், எனது அமைச்சர்கள் சொத்துக்களைக் குவித்தால், நான் அவர்களை வெளியேற்றுவேன். அது ஒரு வாக்குறுதி என்று அவர் ஶ்ரீ செரெண்டாவில் உள்ள செரெண்டா டிரேடர்ஸ் சதுக்கத்தில் ஒரு உரையில் கூறினார்.
உலுசிலாங்கூருக்கான பக்காத்தான் நாடாளுமன்ற வேட்பாளரான பிகேஆரின் டாக்டர் சத்திய பிரகாஷ் நடராஜன், வேட்பாளராக நிற்கும் முன் தனக்குச் சொந்தமான 14 கிளினிக்குகள் உட்பட தனது சொத்துக்கள் அனைத்தையும் அறிவிக்க வேண்டும் என்று அன்வார் மேலும் கூறினார்.
டாக்டர் சத்தியாவுக்கு மக்கள் வாக்களித்தால், அவர்கள் என்னைப் பிரதமராக்க வாக்களிக்கிறார்கள்.
தம்புன் நாடாளுமன்றத் தொகுதியில் பக்காத்தான் வேட்பாளராகப் போட்டியிடும் அன்வார், சீனா, பிலிப்பைன்ஸ், இந்தியா மற்றும் இந்தோனேசியா போன்ற நாடுகளின் தலைவர்களிடம் தனக்கு நல்ல பெயர் இருப்பதாகவும், இதன் மூலம் நாட்டின் பொருளாதாரத்திற்கு உதவ முடியும் என்றும், அதனால் மக்கள் பயனடைவார் என்றும் கூறினார்.