நாளை நண்பகல் 2 மணிக்கு முன் கூட்டணியை உருவாக்கி, பிரதமர் வேட்பாளரின் பெயரை சமர்ப்பிக்கவும் – இஸ்தானா நெகாரா

கோலாலம்பூர், நவம்பர் 20 :

15வது பொதுத் தேர்தலில் (GE15) அதிக இடங்களைப் பெற்ற அனைத்துக் கட்சித் தலைவர்கள் மற்றும் அரசியல் தொகுதிகளின் தலைவர்கள், நாளை பிற்பகல் 2 மணிக்கு முன்னர் புதிய கூட்டணி மற்றும் பிரதமர் வேட்பாளரின் பெயர் ஆகியவற்றை சமர்ப்பிக்க வேண்டும் என்று மாட்சிமை தங்கிய பேரரசர் ஆணையிட்டுள்ளார்.

நேற்று நடந்து முடிந்த 15வது பொதுத்தேர்தலில், புதிய அரசாங்கத்தை அமைப்பதற்கு எந்தவொரு அரசியல் கட்சியாலும் அறுதிப்பெரும்பான்மை பெற முடியவில்லை என்று தேர்தல் ஆணையத்தால் மாட்சிமை தங்கிய பேரரசர் அல்-சுல்தான் அப்துல்லா ரியாதுதீன் அல்-முஸ்தபா பில்லா ஷாவுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதாக அரச குடும்ப தலைமைப் பொறுப்பாளர் டத்தோஸ்ரீ அஹ்மட் ஃபாடில் ஷம்சுடின் தெரிவித்தார்.

எனவே, புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் கூட்டணியையும், பிரதமர் வேட்பாளரின் பெயரையும் இஸ்தானா நெகாராவிடம் சமர்ப்பிக்குமாறு தற்போதைய நாடாளுமன்ற சபாநாயகர் டான்ஸ்ரீ அசார் அஜிசான் ஹருணின் ஒத்துழைப்பை இஸ்தானா நெகாரா கோரியுள்ளதாக அவர் கூறினார்.

“கூட்டாட்சி அரசியலமைப்பின் பிரிவு 40(2)(a) மற்றும் பிரிவு 43(2)(a) ஆகியவற்றின் படி, புதிய கூட்டாட்சி அரசாங்கத்தை அமைப்பது மற்றும் இந்த செயல்முறையின் மூலம் பிரதமரை நியமிப்பது குறித்த மாமன்னரின் முடிவே இறுதியானது, ”என்று அவர் இன்று வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் கூறினார்.

நடந்து முடிந்த 15வது பொதுத்தேர்தலில் பக்காத்தான் ஹராப்பான் (PH) 82 நாடாளுமன்ற இடங்களைப் பெற்றுள்ளது, அதைத் தொடர்ந்து பெரிகாத்தான் நேஷனல் 73 இடங்களையும், தேசியமுன்னணி 30 இடங்களையும் பெற்றுள்ளது.

மொத்தம் 222 இடங்களைக் கொண்ட நாடாளுமன்றத் தொகுதிகளில், புதிய அரசாங்கத்தை அமைக்க எந்தவொரு கட்சியும் அல்லது கூட்டணியும் 112 இடங்களைப் பெற வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here