மனைவியின் 11 வயது மகளை அடித்துக் கொன்றதாக நம்பப்படும் ஆடவருக்கு 5 நாட்கள் தடுப்புக்காவல் உத்தரவு

கோலாலம்பூர், நவம்பர் 24 :

காஜாங்கில் உள்ள தாமான் ஸ்ரீ ரமலில் மனைவியின் 11 வயது மகளை அடித்துக் கொன்றதாக நம்பப்படும் ஆடவர் கைது செய்யப்பட்டு, இன்று முதல் நவம்பர் 28 வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார் என காஜாங் மாவட்ட காவல்துறைத் தலைவர், துணை ஆணையர் முகமட் ஜெய்ட் ஹாசன் தெரிவித்தார்.

53 வயதுடைய அந்த நபர், இறந்த சிறுமியின் மாற்றாந்தந்தை என்று நம்பப்படுகிறார். அவர் குற்றவியல் சட்டத்தின் 302வது பிரிவின் கீழ் விசாரணைகளுக்கு உதவுவதற்காக தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளார் எனவும் அவர் கூறினார்.

கடந்த நவம்பர் 22 ஆம் தேதி நள்ளிரவு 12.39 மணியளவில் செர்டாங் மருத்துவமனையின் மருத்துவ அதிகாரி ஒருவரிடமிருந்து, ஒரு சிறுமி மயக்க நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது என்றும் பாதிக்கப்பட்டவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தது உறுதி செய்யப்பட்டது என்றும் அவர் கூறினார்.

நேற்று பிரேதப் பரிசோதனை நடத்தப்பட்டு, தலை மற்றும் வயிற்றில் ஒரு மழுங்கிய பொருள் தாக்கியதன் காரணமாக குடல் வெடித்துச் சிதறியதால் மரணம் ஏற்பட்டதாக நம்பப்படுகிறது என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதைத் தொடர்ந்து, நேற்று நண்பகல் 2.25 மணியளவில் செர்டாங் மருத்துவமனை வளாகத்தில் வைத்தது குறித்த உள்ளூர் நபர் போலீசாரால் கைது செய்யப்பட்டார் என்று முகமட் ஜெய்ட் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here