கோலாலம்பூர், நவம்பர் 25 :
சுங்கை பூலோவின் கம்போங் குபு காஜா தாலாத்தில் போதைப்பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டில் ஒருவர் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, அவரிடமிருந்து அரை மில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள 40kg ஹெரோயின் போதைப்பொருளை கோலாலம்பூர் போலீசார் கைப்பற்றியுள்ளனர்.
செவ்வாய்கிழமை (நவம்பர் 22) மாலை 5 மணியளவில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக கோலாலம்பூர் காவல்துறைத் தலைவர், ஆணையர் டத்தோ அஸ்மி அபு காசிம் தெரிவித்தார்.
34 வயதுடைய சந்தேக நபர் வாகனம் ஓட்டிச் சென்ற போது, அங்குள்ள ஒரு வீட்டின் அருகில் பிடிபட்டார்.
அவர் ஓட்டி வந்த காரை சோதனை செய்ததில், அதில் மொத்தம் 40 கிலோ எடையுள்ள 90 ஹெரோயின் பாக்கெட்டுகள் அடங்கிய மூன்று பெட்டிகள் இருப்பது தெரியவந்ததாக அவர் இன்று வெள்ளிக்கிழமை (நவம்பர் 25) வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
“அவர் இதுபோன்ற போதைப்பொருள் கடத்தல் செயல்முறையில் கடந்த மூன்று மாதங்களுக்கும் மேலாக செயல்பட்டதாக நாங்கள் நம்புகிறோம். அத்தோடு, கிள்ளான் பள்ளத்தாக்கில் இந்தக் ஹெரோயின் பதப்படுத்தப்பட்டதாக நம்பப்படுகிறது ” என்றும் அவர் கூறினார்.
வேலையில்லாமல் இருந்த சந்தேக நபருக்கு முந்தைய குற்றவியல் பதிவுகள் எதுவும் இல்லை என்றும் விசாரணைக்கு உதவுவதற்காக அவர் ஏழு நாட்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார் என்றும் அவர் கூறினார்.
போதைப்பொருள் நடவடிக்கைகள் குறித்த தகவல் தெரிந்தவர்கள் NCID ஹாட்லைனை 012-208 7222 என்ற எண்ணில் WhatsApp மூலம் தொடர்பு கொள்ளலாம்.