தாக்குதலுக்கு ஆளாகி 3 வாரம் கோமாவில் இருந்த முரளி குப்புசாமி காலமானார்

டத்தோ ஜைனோல் சமா

மலாக்காவில் தாக்குதலுக்கு ஆளாகி இருந்த 50 வயது ஆடவர் சனிக்கிழமை (நவம்பர் 26) இறந்த பிறகு, இந்த வழக்கை காவல்துறையினர் கொலை என்று மறுவகைப்படுத்தி உள்ளனர். கிட்டத்தட்ட மூன்று வாரங்களாக கோமா நிலையில் இருந்த இ.முரளி குப்புசாமி 50, சனிக்கிழமை மாலை 5.57 மணியளவில் பலத்த காயங்களினால் இறந்தார் என்று மலாக்கா காவல்துறைத் தலைவர் துணை  ஆணையர் டத்தோ ஜைனோல் சமா ஞாயிற்றுக்கிழமை (நவம்பர் 27) தெரிவித்தார்.

கொலைக்கான தண்டனைச் சட்டம் பிரிவு 302இன் கீழ் வழக்கை மறுவகைப்படுத்த துணை அரசு வழக்கறிஞருக்கு பரிந்துரை செய்யப்படும் என்று டிசிபி ஜைனோல் கூறினார். முரளியின் ஆறு குழந்தைகளில் ஒருவரான 19 வயதான எம்.கே.டேனியலும் இந்த தாக்குதலில் பலத்த காயம் அடைந்தார்.

ஆபத்தான ஆயுதங்களைக் கொண்டு கடுமையான காயத்தை ஏற்படுத்தியதற்காக, தண்டனைச் சட்டத்தின் 326ஆவது பிரிவின் கீழ், ஆறு வெளிநாட்டவர்கள் மீது செஷன்ஸ் நீதிமன்றத்தில் சமீபத்தில் குற்றம் சாட்டப்பட்டது. குற்றம் சாட்டப்பட்ட தொழிற்சாலை ஊழியர்களான 6 பேருக்கும் ஜாமீன் வழங்கப்படவில்லை.

நீதிமன்றம் டிசம்பர் 21 ஆம் தேதியை அடுத்த வழக்கு தேதியாக குறிப்பிட்டிருக்கிறது. பர்மிய மொழி பேசக்கூடிய மொழிபெயர்ப்பாளரையும் நியமிக்கவும் அறிவுறுத்தப்பட்டிருக்கிறது.

அக்டோபர் 31 அன்று இரவு 10.40 மணியளவில் நடந்த சம்பவத்தில், ஆயர் கெரோவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் பாதிக்கப்பட்ட இருவரையும் ஒரு குழுவினர் தாக்கினர். அப்போது குடிபோதையில் இருந்ததாக கருதப்பட்ட 6 பேர், அதிக சத்தம் போட வேண்டாம் என்று கூறியவர்களை தாக்கியதாக கூறப்படுகிறது. குற்றம் சாட்டப்பட்டவர்கள் அடுக்குமாடி கட்டிடத்தில் பாதிக்கப்பட்டவர்கள் பிரிவுக்கு மேலே உள்ள விடுதியில் வசித்து வந்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here