பிரதமர் அன்வார் இப்ராஹிம், ஒவ்வொரு ரிங்கிட் பொது நிதியும் கணக்கிடப்படும் என்று அறிவித்தார், தனது பயன்பாட்டிற்காக புதிய அதிகாரப்பூர்வ கார் எதுவும் வாங்கப்பட மாட்டாது. மேலும் தனது அலுவலகம் புதுப்பிக்கப்படாது.
அவரது நிர்வாகத்தில் வீண்விரயம் தவிர்க்கப்பட வேண்டும் – ஒரு புதிய கலாச்சாரத்தை அவர் வழங்க விரும்புவதாகக் கூறினார்.
நீங்கள் எதைச் சேமிக்க முடியும் என்று சிந்தியுங்கள் – RM100, RM1000, RM10,000 – இது ஏழைகளுக்குத் திருப்பித் தரப்படும். நான் சம்பளம் வாங்கக்கூடாது என்ற உறுதியுடன் இருக்கிறேன். ஆனால் முக்கியமானது என்னவென்றால், நம்மிடம் உள்ள நிதியை வீணாக்கக்கூடாது என்று அவர் கூறினார்.
தற்போதைய சூழ்நிலையில் நாம் ஒரு புதிய கலாச்சாரத்தைத் தொடங்க வேண்டும் என்பதை நினைவில் கொள்ள அனைத்து துறைத் தலைவர்களுக்கும் இது ஒரு செய்தி. அரசு பணத்தை எங்கள் சொந்த வசதிக்காக பயன்படுத்த வேண்டாம் என்றார்.
காஜாங்கின் சுங்கை லாங்கில் உள்ள அஷாபஸ் சோலிஹின் மசூதியில் நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சிக்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த அன்வார், முந்தைய அரசாங்கங்களில் அடிக்கடி நடந்த விரயத்தைத் தவிர்க்க அனைத்து அரசாங்கப் பணமும் சிறந்த முறையில் பயன்படுத்தப்படும் என்றார்.
அதிகரித்து வரும் வாழ்க்கைச் செலவைக் குறைப்பது குறித்து கவனம் செலுத்தும் அரசாங்கத் திணைக்களங்கள் மற்றும் நிறுவனங்களுடன் நாளை புத்ராஜெயாவில் ஒரு சந்திப்பை நடத்தவுள்ளதாக அவர் கூறினார். தேசிய வாழ்வாதார நடவடிக்கை பேரவையின் விசேஷ கூட்டத்தில் அவர் கலந்து கொள்ள உள்ளார்.
வாழ்க்கைச் செலவைக் கையாள்வதே தனது முதல் முன்னுரிமை என்று அன்வார் முன்பு அறிவித்திருந்தார். மேலும், பிரதமரின் சம்பளத்தை ஏற்கமாட்டேன் என்றும், நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் கொடுப்பனவை மட்டுமே ஏற்றுக்கொள்வேன் என்றும் தம்புன் நாடாளுமன்ற உறுப்பினரான அவர் கூறியுள்ளார்.