உலு சிலாங்கூர், நவம்பர் 28 :
பாத்தாங் கலி, சுங்கை பினாங் நீர்வீழ்ச்சியில் திடீரென நீர் பெருக்கெடுத்ததில், அங்கு பொழுதுபோக்கு நடவடிக்கையில் ஈடுபட்டுக்கொண்டிருந்த இருந்த 10 பேர் கொண்ட குடும்பம், கவலையான தருணத்தை எதிர்கொண்டது.
6 முதல் 63 வயதுடையவர்களைக்கொண்ட அந்தக்குடும்பத்தினர் சம்பவம் நடந்த இடத்தில் கிட்டத்தட்ட நான்கு மணி நேரம் சிக்கியிருக்கலாம் என நம்பப்படுகிறது.
மலேசிய தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் சிலாங்கூர் மாநில இயக்குநர் நோரஸாம் காமிஸ் கூறுகையில், மாலை 4.36 மணிக்கு சம்பவம் தொடர்பில் தமது துறைக்கு அவசர அழைப்பு வந்தது என்றார்.
கோலக் குபு பாரு தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையத்திலிருந்து இயந்திரங்களுடன் ஏழு பேர் கொண்ட குழு உடனே சம்பவம் நடந்த இடத்திற்கு விரைந்ததாக அவர் கூறினார்.
சுங்கை பூலோவைச் சேர்ந்த அந்தக் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் அனைவரும் பாதுகாப்பாக இருப்பதாகவும் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்றும் அவர் கூறினார்.
இந்த நேரத்தில், தீயணைப்பு வீரர்கள் ஆற்றின் மறுகரைக்குச் சென்று பாதிக்கப்பட்டவர்களை பாதுகாப்பான இடத்திற்கு மாற்றும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
மீட்புப் பணிகள் குறித்த அறிவிப்புகள் அவ்வப்போது தெரிவிக்கப்படும்,” என்று அவர் மேலும் கூறினார்.