தாய்லாந்து புத்தமத கோவிலில் போதைமருந்து சோதனை; மாட்டிக் கொண்ட துறவிகள்

பாங்காங், நவம்பர் 30:

தாய்லாந்து நாட்டின் பெத்சாபன் மாகாணத்தில் பங் சாம் பான் என்ற மாவட்டத்தில் புத்த கோவில் ஒன்று அமைந்து உள்ளது. இந்த நிலையில், கோவிலில் இருந்த தலைமை துறவி உட்பட 4 துறவிகளிடம் போதைப்பொருள் பரிசோதனை நடத்தப்பட்டது.

இதில், அனைவரும் மெத்தாம்பிடமைன் போதைப்பொருள் பயன்படுத்தி உள்ளனர் என உறுதியானது. இதனை தொடர்ந்து, கோவிலில் அவர்கள் மேற்கொள்ளும் சடங்குகள் உள்ளிட்டவற்றை செய்வதற்கு தடை விதிக்கப்பட்டனர். அவர்களின் புனிதர் அந்தஸ்தும் பறிக்கப்பட்டது.

இதன்பின்பு, போதைப்பொருள் மறுவாழ்வு சிகிச்சைக்காக சுகாதார மருத்துவமனைக்கு அவர்கள் அனுப்பி வைக்கப்பட்டனர்.

கோவிலில் துறவிகளே இல்லாத சூழலில், அருகேயுள்ள கிராமங்களை சேர்ந்தவர்கள் எந்த சடங்குகளையும் செய்ய முடியாத நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளனர். கோவிலில் சாமி கும்பிட வருபவர்கள், துறவிகளுக்கு அவர்களின் நல்ல செயல்களுக்காக நன்கொடையாக உணவு வழங்குவார்கள். தற்போது, இதனை செய்ய முடியாத சூழல் உள்ளது என அவர்கள் வருத்தம் தெரிவித்தனர்.

தாய்லாந்து நாட்டுக்கு மியன்மாரில் இருந்து லாவோஸ் வழியே போதை பொருள் விநியோகம் நடந்து வருகிறது என ஐ.நா. போதைப்பொருள் மற்றும் குற்ற செயல்களுக்கான அலுவலகம் தெரிவிக்கிறது. இதன்படி அரை டாலருக்கு குறைவான விலையில் தெருவிலேயே போதைப்பொருட்கள் விற்கப்படுகின்றன என்பது வியப்பூட்டுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here