பெக்கான் குடியிருப்பாளர்களுக்கு ஐந்து படகுகளை அன்பளிப்பு செய்தார் பேரரசர்

பெக்கான், டிசம்பர் 3 :

மாட்சிமை தங்கிய பேரரசர் அல்-சுல்தான் அப்துல்லா ரி’அயாத்துடின் அல் முஸ்தாஃபா பில்லா ஷா, பெக்கான் குடியிருப்பாளர்களை இந்த மழைக்காலத்திற்கு தயார்படுத்தும் முகமாக ஐந்து ஃபைபர் படகுகளை அன்பளிப்பாக வழங்கினார்.

“படகுகள் வெள்ளத்தால் பாதிக்கப்படும் குடியிருப்பாளர்களுக்கும் உங்கள் அண்டை வீட்டாருக்கும் மற்றவர்களுக்கும் உதவுவதற்காக பயன்படுத்தப்பட வேண்டும். மேலும், படகுகளை விற்பனை செய்யாதீர்கள்’’ என்றும் படகுகளை பெற்றவர்களுக்கு அறிவுறுத்தினார்.

பகாங் சுல்தான் தெங்கு ஹசனல் இப்ராஹிம் ஆலம் ஷாவுடன் சேர்ந்து, வெள்ளிக்கிழமை தொழுகைக்குப் பின்னர், இந்த பரிசு வழங்கும் விழா இங்குள்ள சுல்தான் அகமட் ஷா மசூதி வளாகத்தில் நடைபெற்றது.

மேலும் மந்திரி பெசார் டத்தோஸ்ரீ வான் ரோஸ்டி வான் இஸ்மாயில் மற்றும் மாநில செயலாளர் டத்தோஸ்ரீ டாக்டர் சலேஹுடின் இஷாக் ஆகியோரும் இதில் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்ச்சியில், சுல்தான் அப்துல்லா பகாங் இஸ்லாமிய மத மற்றும் மலாய் சுங்க கவுன்சிலின் அத்தியாவசிய உணவுப் பொருட்கள் அடங்கிய நன்கொடைகளை 50 பேருக்கு வழங்கினார்.

படகினைப் பெற்றுக் கொண்டவர்களில் ஒருவரான 49 வயதான முஹமட் ஃபஹாமி முகமட் சரிஃப் கூறுகையில், இந்த பரிசு எனக்கு மிக ஆச்சரியமாக இருந்தது.

“வெள்ளம் ஏற்படும்போதெல்லாம் மற்றவர்களின் படகுகளை நான் கடனாகப் பெற வேண்டியிருப்பதால், நான் படகைப் பெற்றுக்கொள்வதாகத் தெரிவித்தபோது எனது சந்தோசத்திற்கு அளவேயில்லை. இப்போது எனக்கு சொந்தமாக படகு இருப்பதால், அது என்னையும், எனது குடும்பத்தினரையும், அண்டை வீட்டாரையும் வெளியேற்ற உதவும்.

“சில நேரங்களில், பாதுகாப்புக் குழு வருவதற்கு (வெளியேறுவதற்கு) நாங்கள் காத்திருக்க நீண்ட நேரம் எடுக்கும்” என்று மூன்று குழந்தைகளைக் கொண்ட தோட்டக்காரரான அவர் கூறினார்.

மற்றொரு பெறுநரான உணவுக்கடை உதவியாளராக இருக்கும் அஹ்மட் கைரா அப்துல் ரஹ்மான், 54, கூறுகையில், “பேரரசரின் அக்கறை என்னை சந்தோசப்படுத்துகிறது. ஒவ்வொரு முறை வெள்ளம் வரும்போதும் எங்கள் வீடு பாதிக்கப்படும். இப்போது படகு கிடைத்ததால் அது என் பகுதி மக்களுக்கு மிகப்பெரிய உதவியாக இருக்கும்” என்கிறார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here