குவா மூசாங், டிசம்பர் 7 :
ஜாலான் குவா மூசாங்-கோலக்கிராய் செல்லும் பாதையின் 74வது கிலோமீட்டரில், நேற்று 158 கிலோகிராம் கெத்தும் இலைகளை ஏற்றிச் சென்ற கார் மற்றுமொரு காருடன் மோதியதில், இளைஞர் ஒருவர் பலத்த காயமடைந்தார்.
நேற்று பிற்பகல் 1.30 மணியளவில் இடம்பெற்ற இந்தச் சம்பவத்தில், கெத்தும் இலைகளுடன் தோயோத்தா வியோஸ் காரை ஓட்டிச் சென்ற 24 வயதுடைய இளைஞன் காரில் சிக்கி தலை, மார்பு மற்றும் கால்களில் காயமடைந்துள்ளார் என்று குவா மூசாங் மாவட்ட காவல்துறைத் தலைவர், கண்காணிப்பாளர் சிக் சூன் ஃபூ தெரிவித்தார்.
முதற்கட்ட விசாரணையில், அந்த நபர் கோலக்கிராயிலிருந்து குவா மூசாங் நோக்கிச் சென்று கொண்டிருந்ததாகவும், சம்பவம் நடந்த இடத்திற்கு வந்த போது, சந்தேக நபர் ஓட்டிச் சென்ற கார் கட்டுப்பாட்டை இழந்து எதிர் பாதையில் நுழைந்து, 34 வயதுடைய நபர் ஓட்டிச் சென்ற ஹோண்டா சிட்டி ரக கார் மீது மோதியது.
மேலும், அந்த நபர் ஓட்டிச் சென்ற காரின் பூத்தில் 158 கிலோ எடையுள்ள கெத்தும் இலைகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அவற்றின் மொத்த மதிப்பு RM4,740 என்று கண்டறியப்பட்டது,” என்று அவர் நேற்று வெளியிட்ட ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.
ஹோண்டா சிட்டி காரின் ஓட்டுநரது வலது கை உடைந்தது என்றும் விபத்தில் காயமடைந்த இருவரும் மேல் சிகிச்சைக்காக கோலக்கிராய் சுல்தான் இஸ்மாயில் பெட்ரா மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டதாக சூன் ஃபூ கூறினார்.
சந்தேக நபர் தொடர்ந்தும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும், தற்போது அவர் கவலைக்கிடமான நிலையில் இருப்பதாகவும் அவர் கூறினார்.
“இந்த வழக்கு சாலை போக்குவரத்து சட்டம் 1987 பிரிவு 43 (1) மற்றும் விஷம் சட்டம் 1952 இன் பிரிவு 30 (3) இன் படி விசாரிக்கப்படுகிறது,” என்று அவர் மேலும் கூறினார்.