கோலாலம்பூர், டிசம்பர் 9:
இந்தாண்டில் இதுவரையில் மொத்தம் 58,239 டிங்கிக் காய்ச்சல் சம்பவங்கள் பதிவாகியிருப்பதாகவும், இது கடந்த ஆண்டின் இதேகாலக் கட்டத்தில் ஒப்பிடுகையில் மொத்தம் 24,049 சம்பவங்கள் பதிவாகியிருந்ததாகவும் சுகாதார தலைமை இயக்குநர், டான் ஶ்ரீ டாக்டர் நோர் ஹிஷாம் அப்துல்லா தெரிவித்தார்.
தற்போதுள்ள 48-வது தொற்று நோய் வாரத்தில் டிங்கிக் காய்ச்சல் சம்பவங்களின் எண்ணிக்கையில் 11.6 விழுக்காடாக, அதாவது 1,935 ஆக அதிகரித்திருக்கிறது. அதே நேரத்தில் இருவர் மரணமடைந்திருப்பதாகவும் அவர் கூறினார்.
டிங்கிக் காய்ச்சலுக்கு இவ்வாண்டில் இதுவரையில் மொத்தம் 39 பேர் பலியாகி இருப்பதாகவும் கடந்த ஆண்டில் இவ்வெண்ணிக்கை 19-தாக இருந்ததாகவும் டாக்டர் நோர் ஹிஷாம் கூறினார்.
மாநில ரீதியாகப் பார்த்தால், சிலாங்கூர் மாநிலம் மிக அதிகமான, அதாவது 24 பகுதிகளில் டிங்கிக் காய்ச்சல் சம்பவங்கள் பதிவாகி இருக்கின்றன. அதனைத் தொடர்ந்து சபாவில் 16 பகுதிகளிலும், கோலாலம்பூர் மற்றும் புத்ராஜெயாவில் 10 பகுதிகளிலும், பினாங்கு, பேராக் மற்றும் சரவாக்கில் தலா ஒரு இடத்திலும் டிங்கிக் காய்ச்சல் சம்பவங்கள் பரவியதாக அவர் கூறினார்.
இந்நிலையில், நாட்டில், 48-வது தொற்று நோய் வாரத்தில் 21 சிக்குன்குன்யா சம்பவங்களும் நிகழ்ந்திருப்பதாகவும், இதுவரை 731 சிக்குன்குன்யா சம்பவங்கள் பதிவாகியுள்ளதாகவும் அவர் கூறினார்.