கோலாலம்பூர், டிசம்பர் 10 :
நாடு முழுவதும் மேற்கொண்ட குற்றத்தடுப்பு நடவடிக்கையில், பல்வேறு குற்றங்களுக்காக கைது செய்யப்பட்ட 4,177 நபர்களில் மொத்தம் 2,466 போதைப்பொருள் விநியோகிஸ்தர்கள் மற்றும் போதைப்பித்தர்களும் அடங்குகின்றனர்.
“Ops Tapis Khas 7” என்ற குறியீட்டுப் பெயர் கொண்ட இந்த நடவடிக்கை, டிசம்பர் 6 முதல் டிசம்பர் 8 வரை நடத்தப்பட்டது.
இந்த நடவடிக்கையின் போது RM3.6 மில்லியன் மதிப்புள்ள 181.84 கிலோ மற்றும் 1,003.12 போதைப்பொருள் மற்றும் மூன்று துப்பாக்கிகளையும் போலீசார் கைப்பற்றியதாக மலேசிய காவல்துறையின் செயலாளர், துணை ஆணையர் டத்தோ நூர்சியா முகமட் சாதுடின் கூறினார்.
இந்த நடவடிக்கையில் 6 வெளிநாட்டவர்கள் மற்றும் ஒரு மாணவர் உட்பட 484 போதைப்பொருள் கடத்தல்காரர்கள் கைது செய்யப்பட்டதாக டிசிபி நூர்சியா தெரிவித்தார்.
மேலும் ஐந்து அரசு ஊழியர்கள் மற்றும் ஒரு மாணவர் உட்பட 1,982 போதைப்பித்தர்களையும் நாங்கள் கைது செய்துள்ளோம் என்று அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்தார்.
இவர்கள் மட்டுமன்றி, இன்ய நடவடிக்கையின் போது தேடப்படும் பட்டியலில் இருக்கும் 307 நபர்களையும் நாங்கள் தடுத்து வைத்துள்ளோம்,” என்று அவர் மேலும் கூறினார்.
இந்த நடவடிக்கையில் புக்கிட் அமான் போதைப்பொருள் குற்றப் புலனாய்வுத் துறையின் (NCID) 1,864 அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் ஈடுபட்டனர்.
“போதைப்பொருள் குற்றங்களைச் செய்பவர்களை, குறிப்பாக போதைப்பொருள் விநியோகிஸ்தர்களை கண்டறிந்து, தடுத்து வைப்பதே இந்த நடவடிக்கையின் நோக்கமாகும்.
போதைப்பொருள் தொடர்பான பல்வேறு குற்றங்களுக்காக “பானி தெனாங்” கும்பலைச் சேர்ந்த 20 பேரையும் நாங்கள் கைது செய்துள்ளோம், மேலும் 239.62 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தோம்,” என்று அவர் கூறினார்.
அத்தோடு போதைப்பொருள் கும்பல்களுக்கு சொந்தமான RM612,563 மதிப்புள்ள சொத்துகளையும் போலீசார் பறிமுதல் செய்தனர் என்று டிசிபி நூர்சியா கூறினார்.
“கைப்பற்றப்பட்ட பொருட்களில் RM32,663 ரொக்கம், நகைகள் (RM49,600) மற்றும் வாகனங்கள் (RM530,300)” என்பன அடங்கும் என்று அவர் கூறினார்.
ஜனவரி முதல் டிசம்பர் வரையிலான காலப்பகுதியில், மொத்தம் 28,710 நபர்கள் கைது செய்யப்பட்டதாக டிசிபி நூர்சியா தெரிவித்தார்.
“அதே காலக்கட்டத்தில் RM 19.8 மில்லியன் மதிப்புள்ள 2,241.53 கிலோ மற்றும் 4,966.44 லிட்டர் போதைப்பொருட்களையும் நாங்கள் கைப்பற்றினோம்,” என்று அவர் மேலும் கூறினார்.