கடந்த சனிக்கிழமை, ஜாலான் ஜெனியாங்-காலாய், குரூன் என்ற இடத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் சுட்டுக் கொல்லப்பட்ட இரு குற்றவாளிகளின் கூட்டாளிகள் என்று சந்தேகிக்கப்படும் மேலும் ஐந்து பேரை போலீசார் தேடி வருவதாக கோலமுடா மாவட்ட காவல்துறைத் தலைவர், துணை ஆணையர் ஜைதி சே ஹாசன் தெரிவித்தார்.
“சம்பந்தப்பட்ட நபர்களை காவல்துறை அடையாளம் கண்டுள்ளது, அச் சந்தேக நபரைக் கைது செய்வதன் மூலம் கோலமுடா மாவட்டத்தில் நிலுவையிலுள்ள 16 கொள்ளை வழக்குகளைத் தீர்க்க முடியும் என்று நம்புகிறோம்” என்று அவர் மேலும் கூறினார்.
கோலமுடா தவிர அவர்கள் பிற மாவட்டங்களிலும் கொள்ளையில் ஈடுபட்டிருக்கலாம் என்று போலீஸ் சந்தேகிக்கிறது.
அவரது கூற்றுப்படி, இந்த மாத தொடக்கத்தில் சிடாம் கிரி என்ற இடத்தில் முதியவர் ஒருவரின் வீட்டில் அத்துமீறி நுழைந்து கொள்ளையடித்த வழக்கில் இந்த குழு ஈடுபட்டுள்ளதாக நம்பப்படுகிறது, இதில் RM80,000 க்கும் அதிகமான இழப்பு ஏற்பட்டது.
ஏறக்குறைய ஏழு பேர் கொண்ட இந்தக் கும்பல் கத்திகளை பயன்படுத்தி கொள்ளையில் ஈடுபடுவதாகவும், ஓய்வூதியம் பெறுவோர் மற்றும் வயதானவர்களை குறிவைத்து பணத்துடன் கொள்ளையடிப்பதாகவும் அவர் கூறினார்.