மலேசிய தேசியக் கொடியை வேண்டுமென்றே தலைகீழாக ஏற்றியதற்காக வங்காளதேசத்தைச் சேர்ந்த ஆடவர் ஒருவருக்கு, மாவட்ட நீதிமன்றம் RM3,500 அபராதம் விதித்து இன்று தீர்ப்பளித்தது.
குற்றஞ்சாடடப்பட்ட 27 வயதான ஹொசின் முஹமட் டிப்லாப், தனக்கு எதிரான குற்றத்தை ஒப்புக்கொண்டதை அடுத்து, இன்று செவ்வாய்க்கிழமை (டிச. 13) மாவட்ட நீதிமன்ற நீதிபதி பி.சாருலதா அபராதம் விதித்தார்.
கடந்த நவம்பர் 26 ஆம் தேதி நண்பகல் 12.40 மணியளவில் புக்கிட் ராஜா, ஜாலான் முஹிப்பாவில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் இக்குற்றத்தைச் செய்ததாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது.
குற்றவியல் சட்டத்தின் பிரிவு 504 இன் கீழ் அமைதியை சீர்குலைக்கும் நோக்கத்துடன் மலேசிய குடிமகனை வேண்டுமென்றே அவமதித்த குற்றத்திற்காக அவர் குற்றம் சாட்டப்பட்டார். இது குற்றம் நிரூபிக்கப்பட்டால், இரண்டு ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை, அல்லது அபராதம் அல்லது இரண்டும் விதிக்க வழி செய்யும்.
வழக்கின் உண்மைகளின்படி, அப்பகுதியில் உள்ள குடியிருப்போர் சங்கத் தலைவர் முதலில் கொடியை தலைகீழாக ஏற்ற வேண்டாம் என்று ஹொசினுக்கு அறிவுறுத்தினார், ஆனால் அவர் ஆத்திரமூட்டும் விதத்தில் வாதிட்டு கொடியின் நிலையை மாற்ற மறுத்துவிட்டார்.
இந்த வழக்கில் ஹொசின் அபராதம் செலுத்தினார் என அறிய முடிகிறது.