கிள்ளானிலுள்ள ஒரு வீட்டில் நடந்த சோதனையின் போது, சிறுவர் ஆபாச படங்கள் வைத்திருந்த உள்ளூர் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டார் என்று மலேசியக் காவல்துறை செயலாளர், டத்தோ நூர்சியா முகமட் சாதுதீன் கூறினார்.
இந்த சோதனை புக்கிட் அமான் குற்றப் புலனாய்வுத் துறையின் (JSJ) பாலியல், பெண்கள் மற்றும் குழந்தைகள் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் (D11) மேற்கொள்ளப்பட்டது.
39 வயதுடைய சந்தேகநபரின் வீட்டில் மேற்கொள்ளப்பட்ட சோதனையின் முடிவுகளில், அந்த நபரின் கணினியில் அதிக அளவு சிறுவர் ஆபாச படங்கள் இருப்பது கண்டறியப்பட்டது.
அதைத் தொடர்ந்து, சந்தேக நபரின் கணினி, வெளிப்புற ஹார்டு டிரைவ், ரூட்டர் மற்றும் கைத்தொலைபேசி ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.
சந்தேக நபர் பாதிக்கப்பட்ட குழந்தைகளுடன் தொடர்பு கொண்டிருந்தார் என்றும், சமூக ஊடகங்களைப் பயன்படுத்தி சிறுவர் ஆபாசப் படங்களை பதிவிறக்கம் செய்தார் என்றும் விசாரணையில் கண்டறியப்பட்டது என்று நூர்சியா கூறினார்.
“குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் சட்டம் 2017 இன் பிரிவு 10 மற்றும் தண்டனைச் சட்டத்தின் பிரிவு 292 இன் படி, சந்தேக நபர் மேலதிக விசாரணைக்காக நேற்று தொடங்கி டிசம்பர் 17 வரை நான்கு நாட்களுக்கு விளக்கமறியலில் வைக்கப்பட்டார்,” என்று அவர் கூறினார்.
மேலும், இந்த வழக்கில் தொடர்புடையவர்களை அடையாளம் காண போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர் என்றார்.