இந்த ஆண்டு முதல் ஏழு மாதங்களில் நாட்டுக்கு வருகை தந்த அனைத்துலக சுற்றுலாப்பயணிகளில் அரைவாசிக்கும் அதிகமானவர்கள் சிங்கப்பூரிலிருந்து வந்தவர்கள் என்று சுற்றுலா, கலை மற்றும் கலாச்சார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்த ஆண்டு ஜனவரி முதல் ஜூலை வரை மலேசியா சுமார் 3.2 மில்லியன் அனைத்துலக சுற்றுலாப் பயணிகளின் வருகையை பதிவுசெய்துள்ளதாகவும் அதில் 1.8 மில்லியன் அல்லது 56.3 விழுக்காடு சுற்றுலாப் பயணிகள் சிங்கப்பூரைச் சேர்ந்தவர்கள் என்று சுற்றுலா அமைச்சகத்தின் பொதுச் செயலாளர் டத்தோ சரயா அர்பி தெரிவித்தார்.
“கோவிட் -19 கட்டுப்பாடுகளுக்குப் பின்னர், இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் நாட்டின் எல்லைகள் மீண்டும் திறக்கப்பட்டதில் இருந்து மலேசியாவிற்குள் நுழையும் வெளிநாட்டுப் பார்வையாளர்களில் சிங்கப்பூர் மிகவும் குறிப்பிடத்தக்க பங்களிப்பாளராக உள்ளது” என்று, இன்று சனிக்கிழமை (டிசம்பர் 17) ஆஞ்சனா வணிக வளாகத்தில் நடந்த ஜோகூர் கைவினைத் திருவிழாவின் அதிகாரப்பூர்வ விழாவின் போது அவர் இவ்வாறு கூறினார்.
“நவம்பர் மாத நிலவரப்படி, இந்த ஆண்டு விற்பனை செய்யப்பட்ட கைவினைப் பொருட்களின் மொத்த அளவு RM258.5 மில்லியனாக இருப்பதாகவும், இது 2022 ஆம் ஆண்டிற்கு நாங்கள் நிர்ணயித்த ஆரம்ப இலக்கான RM200,000 ஐ விட அதிகம்” என்றும் அவர் கூறினார்.