விற்பனை வளாகத்தில் அழகு சாதனப் பொருட்கள், ஆடைகளை திருடுபவர்கள் என நம்பப்படும் ஐவர் கைது

சுபாங் ஜெயா:

விற்பனை வளாகத்தில் அழகு சாதனப் பொருட்கள், ஆடைகளை திருடுபவர்கள் என நம்பப்படும் ஐவர் போலீசாரால் கைது செய்யப்பட்தாக சுபாங் ஜெயா மாவட்ட காவல்துறை தலைவர், துணை ஆணையர் வான் அஸ்லான் வான் மாமட் தெரிவித்தார்.

இங்குள்ள ஜாலான் USJ 25/1A இல் உள்ள ஒரு ஷாப்பிங் சென்டரில் உள்ள ஒரு அழகுசாதனப் பொருள் கடையின் விற்பனையாளரிடமிருந்து கிடைக்கப்பெற்ற திருட்டு புகார் தொடர்பில், இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக அவர் கூறினார்.

“கடந்த டிசம்பர் 2 ஆம் தேதி நள்ளிரவு 12 மணியளவில், அவரது விற்பனை அலமாரிகளில் இருந்த RM4,667 மதிப்புள்ள பல்வேறு வகையான 24 அழகுசாதனப் பொருட்களைக் காணவில்லை என்பதை புகார்தாரர் கவனித்தார். எனவே அங்குள்ள கண்காணிப்பு கேமரா காட்சிக்களின் அடிப்படையில், “டிசம்பர் 1ஆம் தேதி மாலை 3.30 மணியளவில், நான்கு பெண்கள் அழகுசாதனப் பொருட்களைத் திருடியது கண்டறியப்பட்டது” என்று அவர் கூறினார்.

அதனடிப்படையில் முதலாவது சந்தேக நபர் கிள்ளான், ஜாலான் ரசாக்கில் டிசம்பர் 22 அன்று கைது செய்யப்பட்டார். அதனைத் தொடர்ந்து, டிசம்பர் 26 அன்று கோலாலம்பூரில் உள்ள ஜாலான் பீலில் உள்ள ஒரு ஷாப்பிங் சென்டருக்கு முன்னால் மேலும் மூன்று பெண்களும் ஒரு ஆணும் கைது செய்யப்பட்டார் ” என்று அவர் இன்று வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் கூறினார்.

“கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் அனைவரும் 33 முதல் 45 வயதுக்கு இடைப்பட்டவர்கள் என்றும் , அவர்களிடமிருந்து Proton Exora பல்நோக்கு வாகனம் (MPV), 76 சட்டைகள், 28 கால்சட்டைகள் மற்றும் 63 குழந்தைகளுக்கான ஆடைகள் மற்றும் பல்வேறு பிராண்டுகளின் பல அழகுசாதனப் பொருட்களையும் கைப்பற்றினோம்,” என்றார்.

ஐந்து சந்தேக நபர்களை கைது செய்ததன் மூலம், இந்த மாவட்டத்தில் உள்ள 13 வழக்குகளில் 8 வழக்குகளை போலீசார் வெற்றிகரமாக தீர்த்து வைத்துள்ளதாக நம்புவதாக அவர் மேலும் கூறினார்.

குற்றவியல் சட்டத்தின் 380வது பிரிவின்படி சந்தேகநபர்கள் அனைவரும் டிசெம்பர் 29ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர் என்றும், குற்றம் நிரூபிக்கப்பட்டால் 10 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனையும் அபராதமும் அல்லது பிரம்படியும் விதிக்கப்படலாம் என்றும் அவர் கூறினார்.

“வழக்கு தொடர்பான தகவல் தெரிந்தவர்கள், சுபாங் ஜெயா மாவட்ட கட்டுப்பாட்டு மையத்தை 03-78627100 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம், அல்லது வழக்கின் விசாரணை அதிகாரி சார்ஜென்ட் முகமட் ஜைனி அகமது நஸ்ரியை 013-2393158 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்” என்றும் அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here