தீக்காயமடைந்த மகனுக்கு மருத்துவ சிகிச்சை அளிக்க தவறிய குற்றச்சாட்டில் பெற்றோர் கைது

ஜோகூர் பாரு:

கடந்த டிச. 30 அன்று பொந்தியானில் உள்ள கம்போங் பாரிட்டில், நெருப்புடன் விளையாடியதில் பலத்த தீக்காயங்களுக்கு ஆளான தங்கள் 9 வயது மகனை, காயமடைந்து ஐந்து நாட்களாகியும் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று, சிகிச்சை அளிக்கத் தவறிய குற்றச்சாட்டில் அச் சிறுவனின் பெற்றோர் கைது செய்யப்பட்டனர்.

36 மற்றும் 33 வயதுடைய அந்த தம்பதியினர், நேற்று அதிகாலை 2 மணியளவில் மாவட்ட காவல்துறை தலைமையகத்தில் வாக்குமூலம் அளிக்க வந்தபோது, கைது செய்யப்பட்டதாக பொந்தியான் மாவட்ட காவல்துறை தலைவர், முஹமட் ஷோபி தாயிப் தெரிவித்தார்.

தீச்சம்பவத்தால் அவர்களது ஒன்பது வயது மகனுக்கு மூட்டுகள், உடலின் வலது கால், இடது கை, உள் தொடைகள் மற்றும் வலது காது வரை தீக்காயங்கள் ஏற்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

எவ்வாறாயினும், சிறுவன் தற்போது பொந்தியான் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும், ஆனால் மேல் சிகிச்சைக்காக சுல்தானா அமினா மருத்துவமனைக்கு அனுப்பப்படுவார் என்றும் முஹமட் ஷோபி கூறினார்.

“பாதிக்கப்பட்ட குழந்தையின் பெற்றோர் ஐந்து நாட்களுக்குப் பிறகும் குழந்தையை சிகிச்சைக்கு அழைத்துச் செல்லவில்லை, இதன் விளைவாக சிறுவன் காயங்கள் மோசமாகி, துர்நாற்றம் வீசியது. இந்நிலையில் அந்தச் சிறுவன் பெற்றோரால் புறக்கணிக்கப்படுவதாக எண்ணிய பாதிக்கப்பட்ட சிறுவனின் தாயாரின் நண்பர் ஒருவர் காவல்துறையில் புகாரளித்தார் என்று, அவர் நேற்று ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.

சம்பவத்தின் போது, பாதிக்கப்பட்ட சிறுவனும் அவரது சகோதரியும் நெருப்புடன் விளையாடிக் கொண்டிருந்ததாகவும், எரியும் குப்பை மேட்டில் முட்டை அடுக்கி வைக்க பயன்படும் தட்டுகளை வீசி விளையாடினர் என்றும் முதற்கட்ட விசாரணையில் கண்டறிந்ததாக முஹமட் ஷோபி கூறினார்.

“அப்போது வீட்டிற்குள் இருந்த பாதிக்கப்பட்ட சிறுவனின் தாய், வெளியே வெடிச்சத்தம் கேட்டு ஓடிவந்தபோது, தனது மகனது சட்டை மற்றும் பேன்ட் தீப்பிடித்து எரிவதையும், வீட்டின் முன் உள்ள பள்ளத்தில் அவன் குதிப்பதையும் பார்த்தார்.

பின்னர் பாதிக்கப்பட்டவரின் ஆடைகளில் பிடித்திருந்த தீயை அணைத்து தாயும் தந்தையும் அவரை வீட்டிற்குள் கொண்டு வந்ததாகவும், பின்னர் குறித்த பெற்றோர் மருந்தகத்தில் இருந்து வலி நிவாரணி மற்றும் காயத்திற்கு போடும் களிம்புகளை மட்டுமே வாங்கிச் சென்றதாகவும், ஆனால் சிறுவனை மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் செல்லவில்லை என்றும் அவர் கூறினார்.

குழந்தைகள் சட்டம் 2001 இன் பிரிவு 31 (1) (a) இன் கீழ் வழக்கு விசாரிக்கப்படுகிறது என்று முஹமட் ஷோபி மேலும் கூறினார்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here