சுபாங் ஜெயா:
பண்டார் சன்வே, தாமான் புன்சோங் பெர்மாய் மற்றும் பெட்டாலிங் ஜெயா ஆகிய இடங்களில், நேற்று மேற்கொள்ளப்பட்ட மூன்று தனித்தனி சோதனைகளில், கொள்ளை நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்கள் என நம்பப்படும் மூன்று பேரை போலீசார் கைது செய்ததாக, சுபாங் ஜெயா மாவட்ட காவல்துறைத் தலைவர், துணை ஆணையர் வான் அஸ்லான் வான் மாமட் கூறுறினார்.
சிலாங்கூர் காவல்துறை தலைமையகத்தின் D9 பிரிவு மற்றும் பெட்டாலிங் ஜெயா காவல்துறை தலைமையகத்தின் உதவியுடன், சுபாங் ஜெயா மாவட்டக் காவல்துறை தலைமையகத்திலிருந்து காவல்துறை குழுவொன்று, மூன்று சந்தேக நபர்களையும் கைது செய்தது.
“கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து எட்டு கைத்தொலைபேசிகள், வங்கி அட்டைகள், ஒரு மோட்டார் சைக்கிள் மற்றும் வாகன சாவிகள் உட்பட பல்வேறு சான்றுப் பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
மேலும் ” கொள்ளைச் சம்பவங்களுக்கு பயன்படுத்தப்பட்டதாக நம்பப்படும் ஸ்க்ரூடிரைவர்கள், ஸ்பேனர்கள், இடுக்கி மற்றும் கத்திகள் போன்ற கருவிகளும் கைப்பற்றப்பட்டன” என்று, அவர் இன்று வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.
குறித்த சந்தேக நபர்கள் சுபாங் ஜெயா மற்றும் பெட்டாலிங் ஜெயாவைச் சுற்றியுள்ள ஆறு கொள்ளை மற்றும் வழிப்பறி வழக்குகளில் தொடர்புடையவர் என்பது விசாரணையில் கண்டறியப்பட்டுள்ளது என்றும், சந்தேகநபர்கள் போதைப்பொருள் பாவனையில் ஈடுபட்டுள்ளதாகவும் நம்பப்படுவதாக அவர் மேலும் கூறினார்.
குற்றவியல் சட்டத்தின் பிரிவு 394 இன் படி விசாரணைக்காக அனைத்து சந்தேக நபர்களும் இப்போது ஜனவரி 12 வரை ஏழு நாட்களுக்கு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்,” என்று அவர் கூறினார்.