இன்று தனது நண்பர்கள் ஏழுபேருடன் தாசேக் செர்மின், செத்தியா ஆலாமில் ஏரியில் குளித்துக்கொண்டிருந்தபோது காணாமல்போன வாலிபர், நீரில் மூழ்கி உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுவதாக, சிலாங்கூர் தீயணைப்பு மற்றும் மீட்பு துறை தலைவர், டத்தோ நோராசாம் காமிஸ் கூறினார்.
இன்று நண்பகல் 12.16 மணியளவில் குறித்த சம்பவம் தொடர்பில் தமக்கு அழைப்பு வந்ததாகவும், தமது மீட்புக் குழு 12.30 மணிக்கு அந்த இடத்தை அடைந்த்தாகவும் அவர் கூறினார்.
“குறித்த வாலிபர்கள் குழு காலை 11 மணி முதல் நண்பகல் 12 மணி வரை குளிப்பதற்கு ஏரியில் இறங்கியிருக்கலாம் என நம்பப்படுகிறது.
“முதற்கட்ட விசாரணையில், இந்த சம்பவத்தில் ஏழு இளைஞர்கள் ஈடுபட்டதாகவும், அவர்கள் குளித்துக்கொண்டிருக்கும்போது, நீரில் மூழ்கியதாக நம்பப்படும் தங்கள் நண்பரை காணவில்லை என உணர்ந்ததாகவும், உடனே தீயணைப்புத்துறைக்கு தகவலளித்ததாகவும் அவர் கூறினார்.
“தேடல் மற்றும் மீட்பு நடவடிக்கைகள் தற்போது கோத்தா அங்கெரிக் தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையத்தின் நீர் மீட்புக் குழு உள்ளிட்ட குழுக்களால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன,” என்று அவர் இன்று தொடர்பு கொண்டபோது கூறினார்.
காணாமல் போனவர் செமெந்தாவில் வசிக்கும் 16 வயதான முஹமட் கைரில் ஹமிசான் முஸ்தபா என்றும், அவர் கிள்ளான் பள்ளியில் படிக்கிறார் என்று நோராசாம் கூறினார்.