தீயணைக்கும் பணியின்போது, தீயணைப்பு வீரர்கள் மூவர் காயம்

இன்று Taman Perindustrian Ria Jaya விலுள்ள பயன்படுத்தப்பட்ட காகிதங்கள் பதப்படுத்தும் ஆலையில் ஏற்பட்ட தீயை அணைக்கும் பணியின் போது, 3 தீயணைப்பு வீரர்கள் காயமடைந்ததாக, கெடா மாநில தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை துணை இயக்குநர் (செயல்பாடுகள்) மூத்த கண்காணிப்பாளர் முகமதுல் எஹ்சான் முகமட் ஜைன் தெரிவித்தார்.

இன்று அதிகாலை 5.18 மணிக்கு சம்பவம் தொடர்பில் தகவல் கிடைத்ததைத் தொடர்ந்து, சுமார் 30 தீயணைப்பு மற்றும் மீட்பு வீரர்கள் அங்கு விரைந்து, தீயணைப்பில் ஈடுபட்டதாக அவர் கூறினார்.

காயமடைந்த தீயணைப்பு வீரர் ஒருவர் மீது காகிதங்கள் விழுந்ததில் அவரது வலது காலில் காயம் ஏற்பட்டதாகவும், மற்றொருவரின் மூச்சுக் கருவியின் கழுத்து பட்டை உருகியதால் கழுத்தில் தீக்காயங்கள் ஏற்பட்டதாகவும் அவர் கூறினார்.

மூன்றாமவரின் கன்னங்களில் லேசான காயம் ஏற்பட்டதாகவும், அவர்கள் மூவரும் சிகிச்சைக்காக சுல்தான் அப்துல் ஹலிம் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டதாக அவர் கூறினார்.

ஆலையில் ஏற்பட்ட தீ விபத்துக்கான காரணம் மற்றும் ஏற்பட்ட இழப்புகள் குறித்து திணைக்களம் விசாரணை நடத்தி வருவதாக அவர் மேலும் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here