இன்று காலை Universiti Putra Malaysia (UPM) டோல் பிளாசாவில், 44 பயணிகளுடன் சென்ற சுற்றுலா பேருந்து தீப்பிடித்து எரிந்ததில், அனைவரும் அதிஷ்டவசமாக உயிர்தப்பியதாக, மலேசிய தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் சிலாங்கூர் மாநில செயல்பாட்டு துணை இயக்குநர், ஹபிஷாம் முகமட் நூர் கூறினார்.
இந்த சம்பவம் தொடர்பாக தமது துறைக்கு காலை 6.19 மணிக்கு அவசர அழைப்பு வந்தது என்றும், ஜோகூர் பாருவிலிருந்து கோலாலம்பூருக்குச் சென்று கொண்டிருந்த சுற்றுலாப் பேருந்து தீப்பிடித்து எரிந்ததில், 100 விழுக்காடு சேதமடைந்தது. இருப்பினும்,அதில் பயணம் செய்த மொத்தம் 44 பயணிகளுக்கும் பேருந்து ஓட்டுநருக்கும் எந்த அசம்பாவிதங்களும் ஏற்படவில்லை” என்று, அவர் இன்று வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.
மேலும் இந்த தீ விபத்தினால் சுங்கச்சாவடியின் மேற்கூரை 10 விழுக்காடு எரிந்தது என்றும் அவர் கூறினார்.
“சுமார் அரை மணி நேரத்திற்குப் பிறகு தீ வெற்றிகரமாக அணைக்கப்பட்டது. தீ விபத்துக்கான காரணம் இன்னும் விசாரணையில் உள்ளது,” என்று அவர் மேலும் தெரிவித்தார்.