சிரம்பானின் ஜெம்போலிலுள்ள, தாமான் தஞ்சோங்கில் நேற்று நடந்த ஒரு சம்பவத்தில், திருடச் சென்ற வீட்டிலேயே படுத்து உறங்கிக் கொண்டிருந்த நபர் ஒருவரை போலீசார் கைது செய்துள்ளதாக ஜெம்போல் மாவட்ட காவல்துறைத் தலைவர், ஹூ சாங் ஹூக் தெரிவித்தார்.
65 வயதான புகார்தாரர் காலை 6.30 மணியளவில் எழுந்தபோது, சந்தேக நபர் ஒற்றை மாடி வீட்டின் வரவேற்பறையில் தூங்கிக் கொண்டிருப்பதைக் கண்டு, அதிர்ச்சியடைந்ததாகவும் பின்னர் சம்பவம் குறித்து காவல்துறையில் புகார் அளித்ததாகவும் கூறினார்.
இந்த சம்பவத்தின் போது முறைப்பாட்டாளர், அவரது மனைவி மற்றும் அவர்களது நான்கு பிள்ளைகள் வீட்டில் இருந்ததாகவும் “41 வயதுடைய சந்தேக நபர், புகார்தாரருக்கு சொந்தமான மதுபானங்களை உட்கொண்டுவிட்டு, போதை மயக்கத்தில் அங்கேயே தூங்கியதாக நம்பப்படுகிறது.
“சந்தேக நபருக்கு அருகில் இரண்டு கத்திகள், ஒரு ஸ்க்ரூடிரைவர், இரண்டு மதுபான போத்தல்கள் மற்றும் ஒரு டேப்லெட் அடங்கிய காகிதப் பையையும் புகார்தாரர் கண்டெடுத்தார்,” என்று அவர் இன்று வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.
பூட்டப்படாத பின்கதவு வழியாக சந்தேக நபர் வீட்டிற்குள் நுழைந்ததாக நம்பப்படுவதாக ஹூ கூறினார்.
போதைப்பொருள் உட்பட பல முந்தைய குற்றப் பதிவுகளைக் கொண்ட குறித்த சந்தேக நபர், குற்றவியல் சட்டத்தின் 457 வது பிரிவின் கீழ், நான்கு நாட்களுக்கு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.