சொக்சோ ஏற்பாட்டில் இல்லத்தரசிகளுக்கான சமூகப் பாதுகாப்பு காப்புறுதித் திட்டம் அறிமுகம்

கோலாலம்பூர், பிப். 9-

மனிதவள அமைச்சு சொக்சோ அமைப்பின் வாயிலாக Skim Keselamatan Sosial Suri Rumah & Karnival Kerjaya MYFutureJobs 2023 திட்ட நிகழ்ச்சியை நடத்தவுள்ளது.

மலேசிய மக்களுக்கு இந்த இல்லத்தரசிகளுக்கான பாதுகாப்பு காப்புறுதித் திட்டத்தை இன்னும் தெளிவாக விளக்க நடத்தப்படும் இந்நிகழ்ச்சியில் பொது நேர்காணல், பல்வேறு வேலை – சேவை முன்னெடுப்புகள் பெருமளவில் மேற்கொள்ளப்படவுள்ளது.

இந்த நிகழ்ச்சியானது நாளை பிப்ரவரி 11,12ஆம் தேதிகளில் கோலாலம்பூர் மாநாட்டு மையத்தில் நடத்தப்படவுள்ளது. இதில் மகளிர் குறிப்பாக இல்லத்தரசிகள், அரசு சாரா இயக்கங்கள், மலேசிய மக்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதிலும் வேலை தேடும் 5 ஆயிரத்திற்கு மேற்பட்டோர் இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்வார்கள் என இலக்கு முன்வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் நாளை பிப்ரவரி 11ஆம் தேதி இந்த Pelancaran Skim Keselamatan Sosial Suri Rumah & Karnival Kerjaya MYFutureJobs 2023 திட்ட நிகழ்ச்சியை பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அதிகாரப்பூர்வமாகத் தொடக்கி வைப்பார்.

மலேசியாவில் இன்னும் ஆக்கப்பூர்வமான – தரமிக்க சமூகப் பாதுகாப்பு வரையறைகளை மேம்படுத்தும் முயற்சி மீது அரசாங்கத்தின் ஆதரவை வெளிக்காட்டும் வகையில் பிரதமரின் வருகையை மனிதவள அமைச்சும் சொக்சோ அமைப்பும் வரவேற்கின்றது.

இந்த இரண்டு நாட்களில் பொதுமக்கள் இந்த இல்லத்தரசிகளுக்கான சமூகப் பாதுகாப்பு காப்புறுதித் திட்டம் குறித்து அறிந்து கொள்ள சொக்சோ தரப்பினருடன் நேரடியாக உரையாடலாம்.

இந்நிலையில் காலை 9.00 மணி தொடங்கி மாலை 5.00 மணி வரையில் இந்த நிகழ்ச்சியில் பலதரப்பட்ட தொழில்துறைகளைச் சேர்ந்த 140 நிறுவனங்களின் முகப்பிடங்களும் அமைக்கப்பட்டிருக்கும்.

இதில் 13 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வேலை வாய்ப்புகள் வழங்கப்படுகின்றன. குறிப்பாக 20 விழுக்காட்டு வாய்ப்புகள் மாற்றுத் திறனாளிகளுக்கு வழங்கப்படுகின்றன.

இந்நிலையில் இந்த நிகழ்ச்சியில் பல்வேறு வேலை – சேவை சார்ந்த நிகழ்ச்சிகளும் இலவசமாக நடத்தப்படும். வருகையாளர்களை மகிழ்விக்க அதிர்ஷ்ட குலுக்கும் நடத்தப்படும் என சொக்சோ அமைப்பு தெரிவித்துள்ளது.

மேல் விவரங்களுக்கு: www.perkeso.gov.my என்ற அகப்பக்கத்தை வலம் வருவதோடு 1-300-22-800 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம். இதனிடையே இந்த வேலை வாய்ப்பு விழாவிற்கு வேலை தேடி வருபவர்கள் முன்னதாக www.myfuturejobs.gov.my/career என்ற தளத்தில் பதிவு செய்து கொள்ளும்படியும் சொக்சோ அமைப்பு கேட்டுக் கொண்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here