40 இலட்சத்திற்கும் அதிகமான நஷ்டத்தை ஏற்படுத்திய “கூட்டு சேமிப்பு” திட்ட மோசடியில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும், எட்டு நபர்கள் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நான்கு மாநிலங்களில் நடத்தப்பட்ட சோதனைகளைத் தொடர்ந்து, 31 முதல் 37 வயதுக்குட்பட்ட ஆறு பெண்கள், இரண்டு ஆண்கள் ஆகியோர் கடந்த ஜனவரி 27 அன்று கைது செய்யப்பட்டதாக, தேசிய காவல்படையின் செயலாளர் டத்தோ நூர்சியா சாதுடின் கூறினார்.
அக்கும்பலிடமிருந்து சொகுசு வாகனம், ஏடிஎம் கார்டுகள், கைத்தொலைபேசிகள், மோசடி நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தப்பட்டதாக நம்பப்படும் ஆவணங்கள் உள்ளிட்ட பல்வேறு சொத்துக்களும் பறிமுதல் செய்யப்பட்டதாக அவர் கூறினார்.
RM4,438,300 இழப்புகளை உள்ளடக்கிய இந்த ‘sapiza ekstra saving’ எனப்படும் திட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் 116 போலீஸ் புகார்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக நூர்சியா கூறினார்.
“முதற்கட்ட விசாரணையின் அடிப்படையில், இந்தத் திட்டம் 2015 ஆம் ஆண்டிலிருந்து ‘கூட்டு’ பிடிப்பது போன்ற அடிப்படையில் சேமிப்புகளை வழங்கியதன் மூலம் செயலில் இருந்துவருகிறது என்று, அவர் இன்று வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையின் மூலம் தெரிவித்தார்.
கூட்டு பிடிப்பதில் ஆரம்பித்த இந்தக் கும்பல் பின்னர் 2021 இல், இந்தத் திட்டத்தை இரண்டு முதல் ஐந்து மாதங்களுக்கு இடைப்பட்ட காலத்திற்கு RM250 முதல் RM20,000 வரையிலான புதிய சேமிப்புத் திட்டங்களை வழங்கத் தொடங்கியது.
“புதிய திட்டங்கள் சேமித்த மொத்த பணத்தில் 15 விழுக்காடு முதல் 40 விழுக்காடு வரை இலாபம் ஈட்டமுடியும் என உறுதியளித்துள்ளது.
“இருப்பினும், அக்டோபர் 2022 முதல், திட்ட நடத்துனர் பங்கேற்பாளர்களுக்கு குறித்த வருமானத்தை செலுத்தத் தவறிவிட்டார்,” என்று அவர் கூறினார்.
இலாபகரமான வருமானத்தை உறுதியளிக்கும் எந்தவொரு முதலீடு அல்லது சேமிப்புத் திட்டத்திற்கும் பதிவு செய்வதற்கு முன், Semak Mule பயன்பாடு, பேங்க் நெகாரா மலேசியாவின் எச்சரிக்கை பட்டியல் உள்ளிட்ட அதிகாரப்பூர்வ நிறுவனங்களுடன் சரிபார்த்து உறுதிசெய்யுமாறும், விழிப்புடன் இருக்குமாறு நூர்சியா பொதுமக்களுக்கு நினைவூட்டினார்.