மோட்டார் சைக்கிள்கள் ஒன்றோடு ஒன்று மோதியதில் போலீஸ்காரர் மற்றும் தாதி மரணம்

ஜாலான் துன் சர்டான் என்ற இடத்தில், இன்று இரு மோட்டார் சைக்கிள் ஒன்றுடன் ஒன்று மோதியதில் ஒரு போலீஸ்காரரும், ஒரு தாதியும் உயிரிழந்தனர்.

காலை 6.45 மணியளவில் இடம்பெற்ற இச்சம்பவத்தில், 44 வயதான கோப்ரல் முஹமட் ஜோஹைர் துல்கெப்லே, சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார், அதேவேளை, பாலிக் பூலாவ் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த தாதியான நோர்ஸ்யாஸ்வானி ரோஸ்லான், 30, சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தென்மேற்கு மாவட்ட காவல்துறை தலைமையகத்தின் போக்குவரத்துப் பிரிவில் கடமையாற்றும் முஹமட் ஜோஹைர், ரெலாவ்வில் இருந்து பாலிக் பூலாவ் நோக்கிச் சென்று கொண்டிருந்தார். அதே நேரம் பெர்தாம் மருத்துவமனையில் பணி புரியும் நோர்ஸ்யாஸ்வானி, பாலிக் பூலாவ் திசையிலிருந்து ரெலாவ் நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்றார்.

சம்பவ இடத்திற்கு வந்தவுடன், அவர்கள் ஓட்டிச் சென்ற மோட்டார் சைக்கிள்கள் ஒன்றோடு ஒன்று மோதியதில், போலீஸ்காரர் சம்பவ இடத்திலேயே இறந்தார். காயமடைந்த நோர்ஸ்யாஸ்வானி மேல் சிகிச்சைக்காக பாலிக் பூலாவ் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார், ஆனால் காலை 10 மணியளவில் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது உறுதிச் செய்யப்பட்டது.

பாதிக்கப்பட்டவரின் உடல் பிரேத பரிசோதனைக்காக பினாங்கு மருத்துவமனைக்கு (HPP) அனுப்பப்பட்டது. சாலை போக்குவரத்து சட்டம் 1987ன் பிரிவு 41 (1)ன் படி இந்த வழக்கு விசாரிக்கப்படுகிறது.

இதற்கிடையில், தென்மேற்கு மாவட்ட காவல்துறைத் தலைமைக் கண்காணிப்பாளர், கமாருல் ரிசால் ஜெனாலைத் தொடர்பு கொண்டபோது, ​​இந்த சம்பவத்தை உறுதிப்படுத்தினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here