ஆடவரை கொலை செய்ததாக அவரின் மனைவி லட்சுமி தேவி மற்றும் வருண் குமார் மீது குற்றச்சாட்டு

கடந்த 2021 ஆம் ஆண்டு சுபாங் ஜெயா பகுதியிலுள்ள ஒரு முதியோர் பராமரிப்பு இல்லத்தில், ஆடவர் ஒருவரை கொலை செய்ததற்காக, கொலை செய்யப்பட்டவரின் மனைவி உட்பட இரண்டு இந்திய பிரஜைகள் மீது, இன்று ஷா ஆலாம் மாவட்ட நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டது.

மாவட்ட நீதிமன்ற நீதிபதி முகமட் ஷாஃபிக் சுலைமான் முன்னிலையில், அவர்களுக்கு எதிரான குற்றச்சாட்டு ஆங்கில மொழியில் வாசிக்கப்பட்டபோது, குற்றம் சாட்டப்பட்ட 30 வயதான வருண் குமார் மற்றும் 23 வயதான லட்சுமி தேவி ஆகியோர் தாம் புரிந்துக் கொண்டதாக தலையசைத்தனர்.

எனினும், இவ்வழக்கு உயர்நீதிமன்றத்தின் அதிகார வரம்பிற்குள் வருவதால், அவர்களிடமிருந்து எந்த வாக்குமூலமும் பதிவு செய்யப்படவில்லை.

கடந்த 2021-ஆம் அண்டு அக்டோபர் 31-ஆம் தேதி, நள்ளிரவு 1.30 மணிக்கு, சுபாங் ஜெயாவிலுள்ள முதியோர் பராமரிப்பு இல்லத்தில், 25 வயதான அர்ஸ்டிப் சிங் என்ற இந்திய பிரஜையை கொலை செய்ததாக அவ்விருவர் மீதும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

கொலைசெய்யப்பட்ட அர்ஸ்டிப் சிங்கின் மனைவியான குற்றஞ்சாட்டப்பட்ட லட்சுமியுடன், வருண்குமார் கள்ளத்தொடர்பு வைத்திருந்ததாகவும், அதன் காரணமாக அர்ஸ்டிப் சிங்கின் கழுத்தை கத்தியால் அறுத்து கொலை செய்து, புதைத்ததாகவும் கூறப்படுகிறது.

இவ்வழக்கில் குற்றவியல் சட்டம் பிரிவு 302-இன் கீழ் அவர்கள் மீது குற்றம் சுமத்தப்பட்டிருப்பதால், இது குற்றம் நிரூபிக்கப்பட்டால் அதே சட்டம், பிரிவு 34-இன் கீழ் அவர்களுக்கு மரணத் தண்டனை விதிக்க வழி செய்யும்.

அவர்கள் இருவரையும் உத்தரவாதத்தின் பேரில் நீதிமன்றம் பிணையில் விட மறுத்துவிட்டது என்றும், வழக்கின் ஆவணங்களை சமர்ப்பிப்பதற்கும், வழக்கின் மறுசெவிமடுப்பிற்கும் ஏப்ரல் 14-ஆம் தேதியை நீதிமன்றம் நிர்ணயித்தது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here