புதருக்குள் மறைந்திருந்த 97 மியன்மார் நாட்டு சட்டவிரோத குடியேறிகள் கைது

பாசீர் மாசிஸ், ஜெராம் பெர்டா கம்போங் சாபியில் உள்ள நெல் வயல்களுக்கு அருகிலுள்ள புதர்க்காடுகளில் நேற்று, பொது நடவடிக்கை பிரிவினர் மேற்கொண்ட சோதனையில், அங்கு மறைந்திருந்த 97 மியன்மார் நாட்டு சட்டவிரோத குடியேறிகள் கைது செய்யப்பட்டனர்.

16 முதல் 58 வயதுக்குட்பட்ட 78 ஆண்கள் மற்றும் 19 பெண்களும் அடங்குவதாக மாநில காவல்துறைத் தலைவர், டத்தோ முஹமட் ஜாக்கி ஹருன் தெரிவித்தார்.

அந்த இடத்தில் ஒரு நபர் சந்தேகத்திற்கிடமான நிலையில் பிளாஸ்டிக் உணவுப் பொட்டலத்தை எடுத்துக்கொண்டு புதருக்குள் நடந்து செல்வதைக் பொது நடவடிக்கை உறுப்பினர்கள் பார்த்தனர்.

பின்னர், சந்தேக நபர் தான் கொண்டு வந்த பிளாஸ்டிக் பொதியை புதரில் இருந்த ஆண்கள் மற்றும் பெண்கள் குழுவிடம் ஒப்படைத்தார்.

“அதனைத் தொடர்ந்து நடந்த சோதனையில், 97 மியன்மார் நாட்டவர்களும் கைது செய்யப்பட்டனர். மேலும் அவர்களிடம் நாட்டிற்குள் நுழைவதற்கான சரியான அடையாள ஆவணங்கள் எதுவும் இல்லை என்பதும் கண்டறியப்பட்டது,” என்று அவர் இன்று வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.

முகவராக செயல்பட்ட சந்தேக நபரும் 97 சட்டவிரோத வெளிநாட்டினரும் மேலதிக நடவடிக்கைக்காக இங்குள்ள ஜெராம் பெர்டா காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டதாக அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here