சட்டமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து தாம் வெளியேற்றப்பட்டதை எதிர்த்து, முன்னாள் பத்தாங் காலி சட்டமன்ற உறுப்பினர் ஹருமைனி உமர், நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யலாம் என்று சிலாங்கூர் துணை சபாநாயகர் ஹஸ்னுல் பஹாருடின் தெரிவித்தார்.
பத்தாங் காலி சட்டமன்ற உறுப்பினர் எந்தவித அறிவிப்புமின்றி, தொடர்ந்து ஆறு மாதங்களாக மாநில சட்டமன்றக் கூட்டத்தில் கலந்துகொள்ளாததால், அவரது சட்டமன்றபுறுப்பினர் பதவி ரத்து செய்யப்பட்டதாக, கடந்த வியாழக்கிழமை சிலாங்கூர் சபாநாயகர் Ng Suee Lim அறிவித்திருந்தார்.
மேலும் அது தொடர்பான அறிக்கை தேர்தல் ஆணையத்திற்கும் அனுப்பப்பட்டதாகவும் அவர் மேலும் கூறியிருந்தார்.
அதன் பின்னர் ஹருமைனி தம்மைத் தொடர்புகொண்டு, தனது மனைவியின் உடல்நலப் பிரச்சினைகள் மற்றும் பிற குடும்ப விவகாரங்கள் உட்பட சில காரணங்களால்தான் மாநில சட்டமன்றக் கூட்டங்களில் தம்மால் கலந்துகொள்ள முடியவில்லை என்றும், ஆனாலும் தான் இந்தக் காரணங்களை விளக்கி சபாநாயகருக்கு கடிதம் வழங்கத் தவறியதையும் தம்மிடம் ஒப்புக்கொண்டதாக சிலாங்கூர் துணை சபாநாயகர் மேலும் கூறினார்.
“எனது கருத்துப்படி, அவர் சபாநாயகரிடம் எதுவும் சொல்லவில்லை, இருப்பினும் நான் அவரிடம் விளக்கம் கேட்டபோது அவரது தவறுகளை ஒப்புக்கொண்டார்” என்று பந்தாய் மோரிப்பில் நடந்த தேசிய போதைப்பொருள் எதிர்ப்பு தின நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பின்னர், செய்தியாளர்களிடம் கூறினார்.