பாஸ் இளைஞரணியின் ஆயுதங்கள் ஏந்திய அணிவகுப்பு தொடர்பில் இதுவரை 12 பேரின் சாட்சியங்கள் பதிவு – திரெங்கானு காவல்துறை

கடந்த வெள்ளிக்கிழமை, செத்தியூவில் நடைபெற்ற திரெங்கானு பாஸ் கட்சியின் இளைஞர் அணியினரின் ஆயுதம் ஏந்திய இராணுவ பாணியிலான அணிவகுப்பு தொடர்பில் இதுவரை மொத்தம் 12 நபர்களை போலீசார் விசாரித்து, அவர்களின் சாட்சியங்களை பதிவு செய்துள்ளதாக, திரெங்கானு காவல்துறைத் தலைவர், டத்தோ ரோஹைமி முகமட் ஈசா கூறினார்.

இதுவரை நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் உட்பட மொத்தம் 12 சாட்சியங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன என்றும், இந்த சாட்சியமளிக்கும் செயல்முறை கோலா திரெங்கானு போலீஸ் தலைமையகம், செத்தியூ மாவட்ட போலீஸ் தலைமையகம் மற்றும் மாராங் மாவட்ட போலீஸ் தலைமையகம் ஆகியவற்றில் மேற்கொள்ளப்பட்டதாக அவர் கூறினார்.

இந்த அணிவகுப்பு தொடர்பாக மொத்தம் மூன்று போலீஸ் அறிக்கைகள் இதுவரை கிடைத்துள்ளதாகவும், போலீஸ் விசாரணைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்படுவதாகவும் ரோஹைமி மேலும் கூறினார்.

முன்னதாக, HIMPIT 2023 நிகழ்ச்சியில் பங்கேற்ற ஒரு குழுவினர் ஈட்டிகள், வாள்கள் மற்றும் கேடயங்களின் வடிவத்தை ஒத்த ஆயுதங்களை ஏந்தியவாறு அணிவகுத்துச் செல்லும் புகைப்படம் கடந்த வெள்ளிக்கிழமை சமூக ஊடகங்களில் பெரிதும் பகிரப்பட்டதுடன், இது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளதுடன் பொதுமக்களிடையே பல எதிர்வலைகளையும் ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது .

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here