Jana Wibawa திட்டம் : வான் சைபுலுக்கு ஆதரவு தெரிவித்து முஹிடின் மற்றும் பெர்சாத்து தலைவர்கள் நீதிமன்றத்திற்கு வருகை

Jana Wibawa அரசாங்க திட்டத்தில் முறைகேடுகள் நடந்துள்ளதாக கூறி, பெர்சாத்து கட்சியின் தகவல் பிரிவு தலைவரான டத்தோ வான் சைபுல் வான் ஜானுக்கு எதிராக இன்று, கோலாலம்பூர் அமர்வு நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்படுவதற்காக அவர் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தால் அழைத்து வரப்பட்டார்.

டத்தோ வான் சைபுல் வான் ஜானுக்கு ஆதரவு தெரிவித்து, பெர்சாத்து கட்சி தலைவர் டான்ஸ்ரீ முஹிடின் யாசின் மற்றும் பெர்சாத்துவின் உயர்மட்டத் தலைவர்கள் இன்று (பிப். 21) கோலாலம்பூர் நீதிமன்ற வளாகத்திற்கு வந்தனர்.

இந்தக் குழுவினர் காலை 8.58 மணிக்கு நீதிமன்ற வளாகத்துக்கு வந்தனர்.

மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்திற்கு வாக்கு மூலம் வழங்க சென்ற தசெக் கெலுகோர் நாடாளுமன்ற உறுப்பினரும், பெர்சாத்து கட்சியின் தகவல் பிரிவு தலைவரான டத்தோ வான் சைபுல் வான் ஜான்,47 நேற்றிரவு, கைது செய்யப்பட்டார்.

இன்று வான் சைபுல் வான் ஜானுடன் சிகாம்புட் பெர்சாத்து பிரிவு துணைத் தலைவரும், தொழிலதிபருமான ஆடாம் ராட்லான் ஆடாம் முஹமட்,42 மீதும் குற்றஞ்சாட்டப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Jana Wibawa அரசாங்க நிகழ்ச்சித் திட்டம், டான்ஸ்ரீ முஹிடின் யாசின் பிரதமராக இருந்த காலகட்டத்தில், கோவிட்-19 தொற்றுநோய் பரவலின்போது பாதிக்கப்பட்ட பூமிபுத்ரா குத்தகைதாரர்களின் பொருளாதார மீட்புக்காக, நவம்பர் 2020 இல் உருவாக்கப்பட்டது.

இத்திட்டத்தின் கீழ், பூமிபுத்ரா குத்தகைதாரர்களுக்கு நேரடி பேச்சுவார்த்தை மூலம் ஒப்பந்தங்கள் வழங்கப்பட்டன.

இந்நிலையில், கடந்த புதன்கிழமை (பிப். 15), கிராமப்புற மற்றும் பிராந்திய மேம்பாட்டு அமைச்சர் டத்தோஸ்ரீ டாக்டர் அகமட் ஜாஹிட் ஹமிடி, Jana Wibawa-வின் கீழ் RM5.7 பில்லியன் மதிப்பிலான கிராமப்புற மேம்பாட்டுத் திட்டங்கள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக அறிவித்தார். மேலும் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தலைமையிலான நிதி அமைச்சகம், அரசின் தேவைகளுக்கு ஏற்ப திட்டங்கள் வழங்கப்பட்டதா என்பதை சரிபார்க்க விரும்புவதாக அஹ்மட் ஜாஹிட் கூறினார்.

அதனடிப்படையில் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் விசாரணை மேற்கொண்டு, கடந்த வெள்ளிக்கிழமை முன்னாள் பிரதமரும் பெர்சாத்து கட்சி தலைவருமாகிய முஹிடினை விசாரணைக்காக அழைத்தது, வாக்கு மூலம் பதிவு செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here