மார்ச் 1 முதல் மூன்று மாதங்களுக்கு தேசிய உயர் கல்வி நிதிக் கழகத்தின் (PTPTN)) கடனைத் திருப்பிச் செலுத்துவதில் 20% கழிவு வழங்க அரசாங்கம் ஒப்புக்கொண்டுள்ளது என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார்.
நிதி அமைச்சராகவும் இருக்கும் அன்வார், பாதிக்கப்பட்ட கடன் வாங்குபவர்களின் நிதிச் சுமையைக் குறைக்கும் வகையில், RM1,800 மற்றும் அதற்குக் குறைவான மாத வருமானம் உள்ள கடனாளிகளுக்கு ஆறு மாதங்களுக்குத் திருப்பிச் செலுத்துவதை அரசாங்கம் ஒத்திவைக்க ஒப்புக்கொண்டது என்றார். இன்று மக்களவையில் 2023க்கான பட்ஜெட்டை தாக்கல் செய்யும் போது, “கடனை ஒத்திவைப்பதற்கான விண்ணப்பத்தை மார்ச் 1, 2023 முதல் செய்யலாம்,” என்றார்.
உயர்கல்வி அமைச்சகத்திற்கு 2022 இல் RM14.5 பில்லியனுடன் ஒப்பிடும்போது, 2023 பட்ஜெட்டில் RM15.3 பில்லியன் ஒதுக்கப்படும் என்றும், இதில் மொத்தமாக RM436 மில்லியன் பொருளாதாரம், பொது உயர் கல்வி நிறுவனங்களில் (IPTA) உள்கட்டமைப்புகளை சரிசெய்யவும், காலாவதியான உபகரணங்களை மாற்றவும் வழங்கப்படும் என்றும் அன்வார் கூறினார்.
மலேசிய ஆராய்ச்சி மற்றும் கல்வி வலையமைப்பு (MYREN) திட்டத்தின் கீழ், நாட்டில் உள்ள உயர்கல்வி நிறுவனங்களில் இணைய இணைப்பை அதிகரிக்க நிதியுதவியாக 35 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கப்பட்டுள்ளது என்று அவர் கூறினார்.