துருக்கியே நிலநடுக்கம்: கட்டுமான ஊழல் தொடர்பாக 184 பேர் கைது

துருக்கியேயின் காசியான்டெப் நகரில் கடந்த 6-ந் தேதி ரிக்டர் அளவில் 7.8 புள்ளிகள் அளவில் ஏற்பட்ட அதிபயங்கர நிலநடுக்கம் துருக்கியேயிலும், அதன் அண்டை நாடான சிரியாவிலும் பேரழிவை ஏற்படுத்தியது. இருநாடுகளிலும் நிலநடுக்கத்துக்கு பலியானோர் எண்ணிக்கை 50 ஆயிரத்தை கடந்துள்ளது. துருக்கியில் மட்டும் 44 ஆயிரத்துக்கும் அதிகமான உயிர்கள் பறிபோயின.

சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டிருந்தாலும், அதிகப்படியான உயிர் சேதத்துக்கு மோசமான கட்டுமானமே காரணம் என துருக்கியேயை சேர்ந்த கட்டிடவியல் நிபுணர்களும், பொதுமக்களும் குற்றம் சாட்டுகின்றனர். அந்த நாட்டின் கட்டுமான விதிப்படி நிலநடுக்கத்தை எதிர்கொள்வதற்கான பொறியியல் தர அளவு பின்பற்றப்பட வேண்டும். இந்த விதிமுறையை உரிய வகையில் அமல்படுத்தாமல் ஊழல் செய்து கட்டுமான பணிகளே மேற்கொண்டதாலேயே ஆயிரக்கணக்கான கட்டிடங்கள் இடிந்து பல்லாயிரக்கணக்கான உயிர்கள் பறிபோனதாக குற்றம் சாட்டப்படுகிறது.

இந்த கட்டுமான ஊழல் குறித்து அந்த நாட்டின் நீதித்துறை விசாரித்து வருகிறது. இந்த நிலையில் இந்த விசாரணை தொடர்பாக இதுவரை கட்டிட ஒப்பந்ததாரர்கள், கட்டிட உரிமையாளர்கள் உள்பட 184 பேர் கைது செய்யப்பட்டிருப்பதாக துருக்கியே அரசு தெரிவித்துள்ளது. மேலும் இது தொடர்பாக 600-க்கும் அதிகமானோர் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாவும், இன்னும் டஜன்கணக்கானோரை கைது செய்ய நீதித்துறை பிடிவாரண்டு பிறப்பித்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here