சிரம்பான் அருகே சட்டவிரோத குடியேற்றம் கண்டுபிடிப்பு ; கைக்குழந்தை உட்பட 32 வெளிநாட்டவர்கள் கைது

சிரம்பான் அருகிலுள்ள பண்டார் ஐன்ஸ்டேல் அருகே ஒரு சட்டவிரோத குடியேற்றத்தில் தங்கியிருந்த ஒரு கைக்குழந்தை உட்பட 32 ஆவணங்களற்ற வெளிநாட்டவர்கள் கைது செய்யப்பட்டு, தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

அவர்களில் 16 ஆண்களும் 15 பெண்களும் அடங்குவர் என்றும், கைது செய்யப்பட்டவர்கள், அனைவரும் இந்தோனேசியர்கள் என்றும், அவர்கள் அங்குள்ள இரண்டு காற்பந்து மைதானங்கள் உள்ள பகுதியில், பல ஆண்டுகளாக வசிப்பதாக நம்பப்படுவதாகவும் நெகிரி செம்பிலான் குடிநுழைவுத் துறை இயக்குனர், கென்னித் டான் ஐ கியாங் தெரிவித்தார்.

“அமலாக்க அதிகாரிகளிடமிருந்து தப்பிப்பதற்காக அல்லது அவர்களால் கண்டறிவதை தவிர்ப்பதற்காக குறித்த குழுவினர் ஒரு மறைக்கப்பட்ட பகுதியைத் தேர்ந்தெடுத்தனர் என்று, அவர் நேற்று வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் கூறினார்.

“காடுகளில் கூடாரங்கள் போடப்பட்டதை நாங்கள் கண்டுபிடித்தோம், அதனைத் தொடர்ந்து நள்ளிரவு 1 மணியளவில் மேற்கொள்ளப்பட்ட இந்த நடவடிக்கையில், அங்கிருந்த சிலர் எங்களைக் கவனித்தபோது தப்பி ஓட முயன்றனர், ஆனாலும் அவர்கள் அனைவரும் பிடிபட்டனர், அங்கு மொத்தம் 47 இந்தோனேசியர்கள் குடியேற்றத்தில் காணப்பட்டதாகவும் ” அவர் கூறினார்.

சட்டவிரோத குடியேற்றம் குறித்து பொதுமக்களிடம் இருந்து அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்ததாகவும், அதன்பிறகு தனது துறை இரண்டு வார காலத்திற்கு கண்காணிப்பை மேற்கொண்ட பின்னர், குறித்த சோதனை நடவடிக்கையை மேற்கொண்டதாகவும் டான் கூறினார்.

கைது செய்யப்பட்ட அனைவரும் மேலதிக விசாரணைக்காக லெங்கெங்கில் உள்ள குடிநுழைவுத் தடுப்பு முகாமிற்கு அனுப்பப்பட்டுள்ளனர் என்று அவர் மேலும் கூறினார்.

கடந்த பிப்ரவரி 1 ஆம் தேதி, நீலாயில் உள்ள ஒதுக்குப்புறமான பகுதியில் 1 கிலோமீட்டருக்கு மேல் உள்ள காட்டுக்குள் மேற்கொள்ளப்பட்ட் ஒரு சோதனையில் 67 ஆவணமற்ற இந்தோனேசியர்களை கைது செய்திருந்தது நினைவுகூரத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here