ஜோகூர் வெள்ளம்: 202 நிவாரண மையங்களில் 40,141 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர்

இன்று காலை 8 மணி நிலவரப்படி 11,468 குடும்பங்களைச் சேர்ந்த 40,141 பேர் அங்குள்ள 202 தற்காலிக நிவாரண மையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இது மாநிலத்தில் வெள்ள நிலைமை பெரிய அளவில் மாறவில்லை என்பதை காட்டுகிறது.

நேற்றிரவு 8 மணியளவில் அங்கிருந்த 200 நிவாரண மையங்களில் தங்க வைக்கப்பட்ட 40,008 பாதிக்கப்பட்டவர்களுடன் ஒப்பிடும்போது, இன்று அந்த எண்ணிக்கையில் சிறிது அதிகரிப்பு காட்டுகிறது என்று, ஜோகூர் மாநில செயலாளர், டான்ஸ்ரீ டாக்டர் அஸ்மி ரோஹானி கூறினார்.

அங்குள்ள எட்டு மாவட்டங்கள் இன்னும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், பத்து பகாட்டில் மிக அதிகமாக 27,774 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இதைத் தொடர்ந்து மூவார் மாவட்டத்தில் 4,080 பேரும், தாங்காக்கில் 2,536 பேரும், சிகாமாட்டில் 2,034 பேரும், குளுவாங்கில் 1,310 பேரும், கோத்தா திங்கியில் 1,138 பேரும், மெர்சிங்கில் 1,162 பேரும் மற்றும் பொந்தியாயனில் 107 பேரும் தமது வாழ்விடங்களை விட்டு வெளியேற்றப்பட்டு, நிவாரண மையங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

​​முன்னர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டிருந்த கூலாய் மற்றும் ஜோகூர் பாரு ஆகிய மாவட்டங்கள் வெள்ளத்திலிருந்து மீண்டுவிட்டன என்றும் குறித்த இரண்டு மாவட்டங்களில் திறக்கப்பட்ட அனைத்து நிவாரண மையங்களும் மூடப்பட்டதாகவும், அவர் இன்று வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.

இதுவரை ஜோகூர் வெள்ளத்தால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை ஐந்தாக உள்ளது என்றும் அஸ்மி கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here