நேற்று கமுந்திங்கில் உள்ள ஒரு வீட்டின் பேராக் போலீசார் நடத்திய சோதனையில் 280,000 ரிங்கிட் மதிப்புள்ள 14,000 யாபா வகை போதை மாத்திரைகளை கைப்பற்றினர்.
தைப்பிங் மாவட்ட காவல்துறை தலைமையகத்தின் போதைப்பொருள் குற்றப் புலனாய்வுத் துறையினர் நேற்றிரவு மேற்கொண்ட குறித்த சோதனையில், முறையே 34 மற்றும் 50 வயதுடைய ஒரு பெண் மற்றும் ஒரு உள்ளூர் ஆணும் கைது செய்யப்பட்டதாக பேராக் காவல்துறைத் தலைவர், டத்தோஸ்ரீ முகமட் யூஸ்ரி ஹசன் பஸ்ரி கூறினார்.
“வீட்டினுள் சோதனை நடத்தியதன் விளைவாக, 1,425 கிலோகிராம் எடையுள்ள யாபா மாத்திரைகள் என்று சந்தேகிக்கப்படும் மாத்திரைகள் அடங்கிய பொட்டலம் கண்டுபிடிக்கப்பட்டது. அத்தோடு சந்தேக நபர்களுக்கு சொந்தமானது என நம்பப்படும் RM103,500 மதிப்பிடப்பட்ட சொத்து மதிப்புள்ள இரண்டு வாகனங்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட போதைப்பொருள் மற்றும் சொத்துக்கள் உட்பட பறிமுதல் செய்யப்பட்ட மொத்த மதிப்பு RM383,500 என்றும், குறித்த கும்பல் கடந்த செப்டம்பர் 2022 முதல் செயல்படுவதாக நம்பப்படுகிறது என்றும், அவர் இன்று வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.
போதைப்பொருள் கடத்தலுக்காக ஆபத்தான போதைப்பொருள் சட்டம் 1952 இன் பிரிவு 39B இன் கீழ் மேலதிக விசாரணைக்காக இரு சந்தேக நபர்களும் இன்று (மார்ச் 8) முதல் மார்ச் 14 வரை ஏழு நாட்கள் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர் என்று முகமட் யூஸ்ரி கூறினார்.