முதியோர் சட்ட மசோதாவில் பொறுப்பற்ற பிள்ளைகளுக்கான தண்டனைகள் வழங்கும் ஏற்பாடுகள் உள்ளடக்கப்படும்

தமது பெற்றோரை கவனிக்காது, அவர்களை பொறுப்பேற்க மறுக்கும் 18 வயதுக்கு மேற்பட்ட பிள்ளைகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை மற்றும் தண்டனைகள் வழங்குவதற்கான ஏற்பாடுகள் உள்ளிட்டவை, முதியோர்கள் சட்ட மசோதாவில் உள்ளடக்கப்படும் என்றும், இந்த மசோதா அடுத்த ஆண்டு நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் என இன்று நாடாளுமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மலேசியாவில் உள்ள மூத்த குடிமக்களைப் பாதுகாப்பதற்காகவும், 2030ஆம் ஆண்டுக்குள் மலேசியா அதிக முதியோர் எண்ணிக்கை கொண்ட நாடாக மாறுவதற்குத் தயாராக இருக்கும் நிலையிலும், இந்த புதிய சட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளதாக மகளிர், குடும்பம் மற்றும் சமூக மேம்பாட்டு துணை அமைச்சர் அய்மன் அதிரா சாபு தெரிவித்தார்.

முதியோர் சட்ட மசோதாவில் அவற்றின் உள்ளடக்கம், அணுகுமுறை மற்றும் நோக்கம் குறித்து தமது அமைச்சகம் ஒரு ஆய்வை நடத்தியதாக அவர் கூறினார்.

“முதியவர்களைக் கவனித்துக்கொள்வதன் முக்கியத்துவம் குறித்த பொது விழிப்புணர்வை அதிகரிக்க, தமது பெற்றோரைப் பொறுப்பேற்க மறுக்கும் பிள்ளைகளுக்கான (18 வயதுக்கு மேற்பட்ட) தண்டனையின் சரியான தன்மையையும் அமைச்சகம் ஆராயும்,” என்று, நாடாளுமன்றத்தில் நடந்த கேள்வி நேரத்தின்போது, அவர் முகமட் சானி ஹம்சானின் (PH- உலு லங்காட்) கேள்விக்கு இவ்வாறு பதிலளித்தார்.

மூத்த குடிமக்களின் உரிமைகள் மற்றும் நல்வாழ்வைப் பாதுகாப்பதற்கும், முதியோர் சமூகத்தை மேம்படுத்துவதற்கும், மூத்த குடிமக்கள் மற்றும் அவர்களது பராமரிப்பாளர்களுக்கு வலுவான ஆதரவுக் குழுவை உருவாக்குவதற்கும் இந்த மசோதா ஏற்பாடுகளை கொண்டிருக்கும் என்று அய்மான் அதிரா மேலும் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here