மூன்றாம் உலகப்போரை என்னால் மட்டுமே தடுக்க முடியும் – டொனால்டு டிரம்ப்

உக்ரைன் – ரஷியா இடையே போர் ஓராண்டை கடந்து நடைபெற்று வருகிறது. இந்த போரில் உக்ரைனுக்கு அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் ஆயுத உதவி வழங்கி வருகிறது. இதனால் போர் தொடர்ந்து நீடித்து வருகிறது.

இந்நிலையில், அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் அடுத்த ஆண்டு (2024) நடைபெற உள்ள அதிபர் தேர்தலில் மீண்டும் போட்டியிட உள்ளார். இதற்காக பல்வேறு இடங்களில் அவர் கட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார்.

அந்த வகையில் லொவா நகரில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற டிரம்ப் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், ஜோ பைடன் ரஷியாவை சீனாவின் ஆயுதங்கள் பக்கம் கொண்டு சென்றுவிட்டார். இந்த உலகை முடிவுக்கு கொண்டுவரும் அணு ஆயுத போருக்கு ஜோபைடன் நிர்வாகம் நாட்டை கொண்டு சென்றுள்ளது.

ஜோ பைடன் தலைமையிலான அரசால் நாம் 3-ம் உலகப்போரை சந்திக்கலாம். ஏனென்றால் அவர்கள் சரியாக பேசுவதில்லை. மென்மையாக செயல்பட வேண்டிய சூழ்நிலையில் பைடன் நிர்வாகம் கடுமையாக செயல்படுகிறது. கடுமையாக செயல்பட வேண்டிய சூழ்நிலையில் மென்மையாக செயல்படுகிறது. உண்மையை கூறவேண்டுமானால் அவர்கள் என்ன செய்கிறார்கள் என்று அவர்களுக்கே தெரியவில்லை. இது 3-ம் உலகப்போரில் முடியலாம்.

2024-ம் ஆண்டுக்குள் இந்த போர் முடிவுக்கு வரவில்லை என்றால் நான் அதிபராக பொறுப்பேற்ற உடன் பேரழிவை ஏற்படுத்திய ரஷியா – உக்ரைன் போரை நிறுத்துவேன். 3-ம் உலகப்போரை என்னால் மட்டுமே தடுக்க முடியும். எனக்கும் ரஷிய அதிபர் புதினுக்கும் இடையே நல்ல உறவு உள்ளது. நான் கூறினால் புதின் கேட்பார்’ என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here