போலி மலேசிய அடையாள அட்டை (MyKad) வைத்திருந்ததாக குற்றத்தை ஒப்புக்கொண்ட பிலிப்பைன்ஸ் நாட்டைச் சேர்ந்த ஒருவருக்கு, இன்று கோத்தா கினாபாலு மாவட்ட நீதிமன்றம் 24 மாதங்கள் சிறைத்தண்டனை விதித்து, தீர்ப்பளித்துள்ளது.
குற்றஞ்சாட்டப்பட்ட 42 வயதான முகமட் அட்ஸ்லான் சைட் என்பவருக்கு எதிரான குற்றச்சாட்டு, தேசிய பதிவுச் சட்டத்தின் கீழ், இன்று (மார்ச் 17) மாவட்ட நீதிமன்ற நீதிபதி ஜெசிக்கா ஓம்போ ககாயூன் முன்நிலையில் வாசிக்கப்பட்டது.
குற்றம் சாட்டப்பட்டவர் தனது பெயரைக் கொண்ட போலி மலேசிய அடையாள அட்டை (MyKad) வைத்திருப்பதை ஒப்புக்கொண்டார். மேலும் அவர் ஏறக்குறைய ஏழு ஆண்டுகளாக குறித்த போலி MyKad ஐப் பயன்படுத்தியதாக அவர் கூறினார்.
மேலும், ஏப்ரல் 2022 இல் போதைப்பொருள் குற்றத்திற்காக குறித்த நபர் போலீசாரால் கைது செய்யப்பட்டபோது, அவர் அதே MyKad ஐப் பயன்படுத்தியதாக கூறப்படுகிறது.
கடந்த வியாழன் (மார்ச் 16) காலை 9.30 மணியளவில், சின்சூரானில் சபா தேசிய பதிவுத் துறை நடத்திய நடவடிக்கையின் போது, குற்றம் சாட்டப்பட்டவர் கைது செய்யப்பட்டார்.
தண்டனைக் காலம் நிறைவடைந்த பின்னர், குற்றவாளியை குடிநுழைவுத் திணைக்களத்திற்கு அனுப்பி வைக்குமாறும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.