பாகன் டத்தோ அம்னோ பிரிவின் தலைவராக அம்னோ கட்சி தலைவர், டத்தோஸ்ரீ டாக்டர் அஹ்மட் ஜாஹிட் ஹமிடி போட்டியின்றி வெற்றி பெற்றார்.
இன்று சனிக்கிழமை (மார்ச் 18) நடைபெற்ற அம்னோ பிரிவின் ஆண்டுக் கூட்டத்தில் மொத்தம் 424 பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.
இதற்கிடையில், கூட்டத்தின் தொடக்க விழாவில் அஹ்மட் ஜாஹிட் பேசுகையில், சரியான பங்கேற்பாளர்கள் வந்தால், தான் தனது கட்சிப் பதவிகளைத் துறக்கத் தயாராக இருப்பதாகக் கூறியிருந்தார்.
குறிப்பாக இளைய கட்சி உறுப்பினர்களுக்கு அம்னோ தலைமையை ஏற்க வாய்ப்புகள் வழங்கப்பட வேண்டும் என்றார்.
தனக்கு எதிராகப் பகிரங்கமாக பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்தவர்களை தான் மன்னிப்பதாகவும், ஆனால் ‘கட்சிக்குள்ளேயே இருந்து கொண்டு துரோகிகளாக’ இருப்பவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதாக எச்சரிப்பதாகவும் அஹ்மத் ஜாஹிட் கூறினார்.
மேலும் “ஒற்றுமை மற்றும் அதிகாரத்துடன், அம்னோ மீண்டும் எழுச்சி பெற்று மக்களின் ஆதரவைப் பெறும்,” என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.