அமெரிக்காவுக்கு எதிரான போரில் பங்கேற்க 8 லட்சம் பேர் ராணுவத்தில் சேர தயார்: வடகொரியா

அமெரிக்கா மற்றும் ஐ.நா. அமைப்பு உள்ளிட்டவற்றின் எதிர்ப்புகளையும் மீறி வடகொரியா அவ்வப்போது ஏவுகணை பரிசோதனைகளை நடத்தி வருகிறது. இந்த நிலையில், 5 ஆண்டுகளில் இல்லாத வகையில் அமெரிக்கா மற்றும் தென்கொரியா என இரு நாடுகளும் மிக பெரிய அளவில், கூட்டு ராணுவ பயிற்சியை தொடங்கி உள்ளது. இதன்படி, கடந்த 13-ந்தேதி தொடங்கிய இந்த பயிற்சியானது, வருகிற 23-ந்தேதி வரை நடைபெற உள்ளது.

இதற்கு பதிலடி தெரிவிக்கும் வகையில் தென்கொரியாவின் அண்டை நாடான வடகொரியா,ஏவுகணைகளை செலுத்தி பரிசோதனை செய்து வருகிறது. கடந்த 14-ந்தேதி குறுகிய தொலைவை சென்று தாக்கும் 2 ஏவுகணைகளை ஜப்பான் கடல் பகுதியில் வடகொரியா செலுத்தியது. குறுகிய தொலைவில் சென்று இலக்கை தாக்க கூடிய அவை 620 கி.மீ. தொலைவுக்கு சென்றன என தெரிவிக்கப்பட்டது. வடகொரிய ஏவுகணை பரிசோதனைபற்றி ஜப்பான் பிரதமர் புமியோ கிஷிடா பின்னர் கூறும்போது, வடகொரியா ஏவுகணை பரிசோதனை பற்றி நாங்கள் அறிந்திருக்கிறோம்.

அதுபற்றிய தகவலை சேகரித்து வருகிறோம். இந்த பரிசோதனையால் பாதிப்பு எதுவும் இதுவரை பதிவாகவில்லை என கூறினார். 2 ஏவுகணைகளும் ஜப்பானின் சிறப்பு பொருளாதார மண்டல பகுதிக்குள் விழவில்லை என கூறப்படுகிறது. வடகொரியாவின் அதிரடிக்கு ஜப்பானும் தயாராகி வருகிறது என அந்நாட்டின் தலைமை அமைச்சரவை செயலாளர் ஹிரோகாஜூ மத்சுனோ கூறியுள்ளார். அமெரிக்கா மற்றும் தென்கொரியா இடையேயான கூட்டு ராணுவ பயிற்சியை தொடர்ந்து, அதனை படையெடுப்புக்கான ஒத்திகை என்று வடகொரியா கூறியுள்ளது. இதனை தொடர்ந்தே அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்த ஏவுகணை பரிசோதனையை வடகொரியா நடத்தி உள்ளது என பார்க்கப்படுகிறது.

எனினும், கூட்டு ராணுவ பயிற்சியானது தற்காப்புக்காக நடத்தப்படுகிறது என்று சியோல் மற்றும் வாஷிங்டன் கூறி வருகின்றன. இந்நிலையில், சி.என்.என். செய்தி நிறுவனம் வெளியிட்டு உள்ள செய்தியில், அமெரிக்காவுக்கு எதிரான போரில் ஈடுபட, 8 லட்சம் மக்கள் வடகொரிய ராணுவத்தில் இணைவதற்கு ஆர்வமுடன் இருக்கின்றனர் என வடகொரியா கூறுகிறது. அவர்களில் பலர் மாணவர்கள் மற்றும் தொழிலாளர்களாக உள்ளனர் என வடகொரியாவின் ரோடங் சின்முன் என்ற செய்தி நிறுவனம் தெரிவித்து உள்ளது. அமெரிக்கா மற்றும் தென்கொரிய ராணுவ கூட்டு பயிற்சிக்கு பதிலடியாக கடந்த வியாழ கிழமை வடகொரியா, வாசாங்போ-17 என்ற கண்டம் விட்டு கண்டம் சென்று தாக்க கூடிய ஏவுகணை பரிசோதனை ஒன்றை நடத்தியது.

இதனை வடகொரிய அரசு உறுதிப்படுத்தி உள்ளதுடன், அமெரிக்கா மற்றும் தென்கொரிய ராணுவம் இணைந்து பெரிய அளவில் கூட்டாக போர் பயிற்சியில் ஈடுபட்டு, போரை தூண்டி விடும் வகையில், நடந்து கொள்வதற்கு எதிரான கடுமையான எச்சரிக்கையே இது என்று தனது ஏவுகணை பரிசோதனையை குறிப்பிட்டு உள்ளது.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here