நாடு தழுவிய நிலையில் ஒப்பந்த மருத்துவர்கள் வரும் ஏப்ரல் 3 முதல் ஏப்ரல் 5 வரை வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளதால், சுகாதார கிளினிக்குகள் மற்றும் பொது மருத்துவமனைகளுக்கு மக்களை செல்ல வேண்டாம் என்றும், அவ்வாறு சென்றாலும் அங்கு மருத்துவரின் பார்வைக்காக காத்திருக்கும் நேரம் இன்னும் அதிகமாக இருக்கும் என்று Mogok Doktor Malaysia அமைப்பு அறிவுறுத்தியுள்ளது.
“ஏப்ரல் 3 முதல் ஏப்ரல் 5 வரை தயவுசெய்து எந்த பொது மருத்துவமனைகள் அல்லது அரசு கிளினிக்குகளுக்குச் செல்ல வேண்டாம்” என்று, இன்று வியாழக்கிழமை (மார்ச் 30) வெளியிட்டுள்ள ஒரு இன்ஸ்டாகிராம் பதிவில் அது தெரிவித்துள்ளது.
“குறைந்த ஊதியத்திற்கு எதிராக மருத்துவ/அவசரகால விடுப்பு எடுத்துக்கொண்டு, நாடுமுழுவதும் மொத்தம் 8,000க்கும் மேற்பட்ட ஒப்பந்த மருத்துவர்கள் இந்த வேலைநிறுத்தத்தில் ஈடுபடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது என்றும் அவ்வமைப்பு தெரிவித்துள்ளது.