பல சீன தொழில்முனைவோர் மற்றும் வணிகத் தலைவர்கள் மலேசியாவில் முதலீடு செய்ய அல்லது வணிகங்களை விரிவுபடுத்த ஆர்வமாக உள்ளனர் என்று MCA தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் வீ கா சியோங் கூறுகிறார்.
சீன முதலீட்டாளர்கள் மலேசியாவில் தொழில்புரியக்கூடிய சாத்தியக்கூறுகளைக் கண்டதாகவும், மேலும் தொழில் செய்வதற்கான சாதகமான சூழலை வழங்கும் இந்த நாட்டில் முதலீடு செய்வதில் அவர்கள் நம்பிக்கை கொண்டிருப்பதாகவும் அவர் கூறினார்.
நேற்று பெய்ஜிங்கில் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமுடன் நடந்த சந்திப்பில், மலேசியாவில் முதலீடு செய்ய விருப்பம் தெரிவித்ததாக அவர் மேலும் கூறினார்.
பிரதமரின் சீனாவுக்கான முதல் உத்தியோகபூர்வ விஜயத்துடன் இணைந்து நடைபெற்ற இந்த நிகழ்வில், 37 முன்னணி சீன நிறுவனங்களின் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.
“நம்மிடம் உள்ள சிறந்த வாய்ப்புகள் மற்றும் சாதகமான முதலீட்டுச் சூழலைக் கருத்தில் கொண்டு மலேசியாவிற்கு அதிக சீன முதலீடுகளைக் கொண்டுவருவதற்கு இங்கு ஆர்வம் உள்ளது,” என்று டாக்டர் வீ நேற்று வெளியிட்டுள்ள ஒரு பேஸ்புக் பதிவில் கூறினார்.
“பிரதமர், அனைத்துலக வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர், தெங்கு டத்தோஸ்ரீ ஜஃப்ருல் அப்துல் அஜிஸ் மற்றும் அவரது குழுவினருக்கு இந்த நுண்ணறிவு மற்றும் முற்போக்கான உரையாடலுக்கு உண்மையிலேயே வாழ்த்துக்கள்” என்று அவர் அந்த பதிவுல் தெரிவித்தார்.
மேலும் மலேசிய மற்றும் சீன நிறுவனங்களுக்கு இடையே 19 புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டதன் மூலம் அன்வாரின் சீனப்பயணம் மிகவும் பயனுள்ளதாக இருந்தது என்றார்.
மலேசிய வரலாற்றில் இதுவரை இல்லாத அளவு முதலீடு RM170 பில்லியனாக இருப்பதாகவும், நீண்ட காலத்திற்கு நாட்டின் பொருளாதார வளர்ச்சியை உயர்த்தும் என்றும், பெய்ஜிங்கில் நடைபெற்ற மலேசியா-சீனா வர்த்தக உச்சி மாநாட்டில் பிரதமர் இதை அறிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.