நடிகை பரினீதி சோப்ரா மற்றும் ஆம் ஆத்மி எம்.பி. ராகவ் சத்தா நீண்டகாலம் காதலித்து வந்தனர். எனினும், இதனை அவர்கள் வெளியே தெரிவிக்காமல் இருந்தனர். ஐ.பி.எல். கிரிக்கெட் உள்ளிட்ட பல நிகழ்ச்சிகளில் அவர்கள் ஒன்றாக காணப்பட்டனர். அவர்கள் திருமணம் செய்து கொள்வார்களா? இல்லையா? என்ற சந்தேகம் ரசிகர்கள் உள்பட பலருக்கும் எழுந்தது. இந்நிலையில், இந்த யூகங்களுக்கு இன்று முடிவு ஏற்பட்டு உள்ளது. அவர்கள் இருவரின் நிச்சயதார்த்த விழா டெல்லியில் உள்ள கபுர்தலா ஹவுசில் இன்று நடந்தது.
இதில், இரு வீட்டார், அவர்களது நண்பர்கள் மற்றும் சிறப்பு விருந்தினர்கள் கலந்து கொண்டனர். அவர்கள் முன்னிலையில், இருவரும் மோதிரம் மாற்றி கொண்டனர். இதனை தொடர்ந்து, விழாவில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை அந்த ஜோடி இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து கொண்டனர். வெள்ளை நிற ஆடையில் ஜோடி தோன்றினர். இதற்கு பதிலாக திரையுலகினர், நண்பர்கள், தலைவர்கள் தங்களது வாழ்த்துகளை குவித்து விட்டனர். பரினீதியின் திரை துறை நண்பர்களான ரன்வீர் சிங், அனுஷ்கா சர்மா, பூமி பட்னாகர், நேஹா தூபியா, கனிகா கபூர், மணீஷ் மல்கோத்ரா, கபில் சர்மா உள்ளிட்டோர் அதில் வாழ்த்துகளை தெரிவித்து கொண்டனர்.
இந்த ஜோடி லண்டனில் ஒன்றாக படித்து உள்ளனர். அப்போது இருந்தே அவர்கள் நீண்டகால நண்பர்களாக இருந்தனர். இந்நிலையில், தங்களது காதலை வெளியுலகுக்கு அவர்கள் இருவரும் உறுதிப்படுத்தவில்லை. எனினும், ஆம் ஆத்மி எம்.பி. சஞ்ஜீவ் அரோரா, இருவரின் புகைப்படங்களை கடந்த மார்ச்சில் பகிர்ந்து, தனது வாழ்த்துகளை தெரிவித்து கொண்டார். இந்த நிகழ்ச்சியில், காங்கிரஸ் தலைவர் ப. சிதம்பரம், முன்னாள் மராட்டிய மந்திரி ஆதித்ய தாக்கரே, டெல்லி முதல்-மந்திரி கெஜ்ரிவால் மற்றும் பிற தலைவர்கள் நேரில் கலந்து கொண்டனர்.