பினாங்கு, பேராக் மற்றும் கெடாவில் வீடுடைத்து திருட்டில் ஈடுபட்டதாக நம்பப்படும் ‘மிசான் கும்பலை’ சேர்ந்தவர்கள் என நம்பப்படும் ஒரு பெண் உட்பட ஏழு சந்தேக நபர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.
கடந்த மே 20 மற்றும் 26 ஆம் தேதிகளில் கெடா மாநிலம் முழுவதும் மேற்கொண்ட நடவடிக்கைகளில், 25 முதல் 52 வயதுடைய சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டதாக கெடா காவல்துறைத் தலைவர், டத்தோ வான் ஹாசன் வான் அகமட் தெரிவித்தார்.
சுங்கை பட்டாணிக்கு அருகிலுள்ள பெடோங்கிலுள்ள ஒரு வணிக வளாகம் திருடப்பட்டதில் சுமார் RM25,000 இழப்பு ஏற்பட்டது, இதில் 25 முதல் 30 வயதுடைய பெண் உட்பட நான்கு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர்.
“அவர்கள் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, கடை உடைத்து திருடியதாக நம்பப்படும் பல்வேறு பொருட்கள் கைப்பற்றப்பட்டன.
“மெத்தாம்பெட்டமைன் என்று சந்தேகிக்கப்படும் இரண்டு பிளாஸ்டிக் பைகள், ஒரு புரோத்தோன் பெர்டானா கார் மற்றும் சில திருட்டுக்கு உதவும் கருவிகள் என நம்பப்படும் கருவிகளும் கைப்பற்றப்பட்டன,” என்று அவர் இன்று வியாழக்கிழமை (ஜூன் 1) செய்தியாளர்களிடம் கூறினார்.
அதனைத் தொடர்ந்து, 43 முதல் 52 வயதுடைய மேலும் மூன்று சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டதாகவும்,
அனைத்து சந்தேக நபர்களையும் கைது செய்ததன் மூலம், அவர்கள் 15 திருட்டு வழக்குகளை தீர்த்துள்ளதாக போலீசார் நம்புகின்றனர்.
மேலும் சந்தேக நபர்கள் அனைவருக்கும் திருட்டு மற்றும் போதைப்பொருள் தொடர்பான கடந்தகால குற்றவியல் பதிவுகள் இருப்பது சோதனையில் கண்டறியப்பட்டதாக வான் ஹாசன் கூறினார்.
“தலைவர் என்று நம்பப்படும் 43 வயது நபர் உட்பட மேலும் மூன்று சந்தேக நபர்களை போலீசார் இன்னும் தேடி வருகின்றனர்,” என்று அவர் கூறினார்.