மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் வெளியான கடைசி படம் மாமன்னன். அந்த படத்தில் ஒடுக்கப்பட்ட சாதி எம்.எல்.ஏ.வான மாமன்னனின் மகன் அதிவீரனாக நடித்து கைதட்டல்களை பெற்றுள்ளார் உதயநிதி ஸ்டாலின்.அவருக்கு அப்பாவாக வடிவேலுவும், அம்மா வீராயியாக கீதா கைலாசமும் நடித்திருந்தார்கள். யார் அந்த கீதா கைலாசம் என்று கேட்கிறீர்களா?. அவர் வேறு யாரும் அல்ல கே. பாலசந்தரின் மருமகள் தான்.
வீட்ல விசேஷம் படத்தில் நர்ஸாக நடித்தார். இதையடுத்து பா. ரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா நடிப்பில் வெளியான சார்பட்டா பரம்பரை படத்தில் பசுபதிக்கு மனைவியாக நடித்தார். சிறு, சிறு கதாபாத்திரங்களில் நடித்து வரும் கீதா கைலாசத்தை உதயநிதி ஸ்டாலினுக்கு அம்மாவாக நடிக்க வைத்தார் மாரி செல்ராஜ். அது சிறு கதாபாத்திரம் தான் என்றாலும் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார்.
கீதா கைலாசம் யார் என்று தெரியாதவர்களோ, இந்த வீராயி நிஜத்தில் யாராக இருக்கும் என கேள்வி எழுப்பினார்கள். அவர் பாலசந்தரின் மருமகள் என்று தெரிந்த பிறகு, அடேங்கப்பா பெரிய இடத்து மருமகளா என வியந்து பேசிக் கொண்டிருக்கிறார்கள். பாலசந்தரின் மருமகள் இப்படி இயல்பாக நடித்து கைதட்டல்களை பெறுவதில் ஆச்சரியம் இல்லை என்கிறார்கள் சினிமா ரசிகர்கள்.