நாகேந்திரன் வேலாயுதம்
சிரம்பான், ஜூலை 4-
வரும் நெகிரி செம்பிலான் மாநில சட்டமன்றத் தேர்தலில் ஏழு தொகுதிகளில் பெரிக்காத்தான் நேஷனல் இந்திய வேட்பாளர்களை நிறுத்துவது குறித்து பரிசீலித்து வருவதாக நம்பப்படுகிறது.
பெர்சத்துவில் அதன் இந்தியர் பிரிவில் நால்வரும் பாஸ் கட்சி ஆதரவு மன்றம் சார்பாக மூவரும் நிறுத்தப்படலாம் என ஆரூடங்கள் கூறப்படுகின்றன.
ஜெராம் பாடாங், ஸ்ரீ தஞ்சோங் ஆகிய சட்டமன்றத் தொகுதிகளில் இந்திய வேட்பாளர்கள் நிறுத்தப்படுவது ஓரளவு உறுதிப்படுத்தப்பட்டிருக்கும் வேளையில், லுக்குட், மம்பாவ், நீலாய், பகாவ், ரெப்பா ஆகிய தொகுதிகளிலும் இந்திய வேட்பாளர்களின் பெயர்ப்பட்டியலில் இடம்பெற்றுள்ளதாக அக்கட்சி வட்டாரங்களில் தகவல் கசிந்துள்ளது. இதற்கான உறுதிக்கடிதங்கள் வேட்புமனு சமர்ப்பிப்புக்கு மூன்று நாட்களுக்கு முன்னதாக வழங்கப்படும் என அதன் தேர்தல் குழு தகவல் வெளியிட்டுள்ளது.
பெரிக்காத்தான் நேஷனல் கூட்டணிக் கட்சியைச் சேர்ந்த கெராக்கான் சிரம்பான் ஜெயா, ரஹாங், சுவா, புக்கிட் கெப்பாயாங், லோபாக், திமியாங் ஆகிய ஆறு தொகுதிகளில் மட்டும் அதன் வேட்பாளர்களைக் களமிறக்க முடிவு செய்துள்ளது என்றும் அவர்கள் அனைவரும் சீன வேட்பாளர்கள் எனத் தெரிய வருகிறது எனவும் அக்கட்சியின் இந்தியத் தலைவர் ஒருவர் தெரிவித்தார்.
இக்கட்சியின் தேசியப் பேராளர் மாநாட்டுத் தேர்தல் வரும் ஜூலை 16ஆம் தேதி நடைபெறவுள்ள வேளையில், அத்தேர்தலில் தேசியத் தலைவர் உட்பட அனைத்து உயர் பதவிகளுக்கும் போட்டி நடைபெறவுள்ளது.
இத்தேர்தலில் அதன் நடப்புத் தலைவர் டத்தோ டாக்டர் டோமினிக் லாவ் மிகக் கடுமையான போட்டியை எதிர்கொண்டுள்ளார். மூன்று வேட்பாளர்கள் இவரை எதிர்த்துக் களம் இறங்கியுள்ளனர்.
அச்சூழ்நிலையில் சட்டமன்றத் தேர்தலில் கெராக்கான் கட்சி போட்டியிடுவது குறித்து மறுபரிசீலனை செய்வதற்கு வாய்ப்புள்ளதாக பெயர் குறிப்பிட விரும்பாத ஒரு தலைவர் ஆரூடம் கூறியுள்ளார்.
நெகிரி செம்பிலான் சட்டமன்றத் தேர்தல் இம்முறை மிகவும் கடுமையாக இருக்கும் என்றும் பெரிக்கத்தான் நேஷனல் அதன் வேட்பாளர் பட்டியலில் இடம்பெறும் வேட்பாளர்களைத் தேர்வு செய்வதில் அதிக கவனம் செலுத்தி வருகிறது என்றும் கூறப்படுகிறது.
36 சட்டமன்றத் தொகுதிகளில் 23 தொகுதிகள் ஒற்றுமைக் கூட்டணி அரசாங்கத்திற்குப் பெரும் சவாலாக அமையலாம் என இங்குள்ள அரசியல் ஆய்வாளர்கள் கருத்துரைத்துள்ளனர்.
இதனிடையே ஜெராம் பாடாங் தொகுதியில் மஇகா தனது வேட்பாளரை நிறுத்தாது என தகவல் உறுதிப்படுத்தப்பட்டு வரும் வேளையில், அங்கு அம்னோ தனது வேட்பாளரை நிறுத்துவதற்கு தயார் நிலையில் உள்ளதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.