நேற்று புதன்கிழமை (ஜூலை 12) பிற்பகுதியில் பெய்த மழையின் காரணமாக ஏற்பட்ட நிலச்சரிவின் போது, லிண்டாஸ் அருகே உள்ள ஒரு குடியிருப்பு வாகன நிறுத்தத்தில் நிறுத்தப்பட்டிருந்த ஐந்து வாகனங்கள் ஓரளவு மண்ணிற்குள் புதைந்தன.
இருப்பினும், இந்த நிலச்சரிவில் உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை என்று தீயணைப்பு மற்றும் மீட்பு துறையின் செய்தித் தொடர்பாளர் கூறினார்
தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் கூற்றுப்படி, இரவு 8 மணியளவில் தாமான் பப்ளிக் பாசா 2 இல் மூடப்பட்ட வாகன நிறுத்துமிடத்தில் நடந்த சம்பவம் குறித்து அவர்களுக்குத் தகவல் கிடைத்தது என்றும், உடனே லிண்டாஸ் தீயணைப்பு நிலையத்தைச் சேர்ந்த குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்த்தபோது, கார்கள் குப்பைகள் மற்றும் மரங்களுக்கு அடியில் ஓரளவு புதைந்து கிடப்பதையும், வாகன நிறுத்துமிடத்தின் கூரை இடிந்து விழுந்ததையும் கண்டனர்.
“கார்களை மீட்டெடுத்த பிறகு, தீயணைப்பு வீரர்கள் குழு, குறித்த இடத்தில் வேறு எந்த ஆபத்தும் இல்லை என்பதை உறுதிசெய்த பிறகு, நடவடிக்கை இரவு 10.17 மணிக்கு முடிவடைந்தது,” என்று ,அவர் மேலும் கூறினார்.
புதன்கிழமை நண்பகல் முதல் தொடர்ந்து பெய்த மழையைத் தொடர்ந்து, சபாவின் மேற்குக் கடற்கரையில் பல மாவட்டங்களில் திடீர் வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகள் போன்ற இயற்கை பேரழிவுகள் ஏற்பட்டன.
தற்போதைய நிலவரப்படி, மழை நின்றுவிட்ட போதிலும் பெரும்பாலான பகுதிகளில் நிலைமை மேம்பட்டுள்ளது, இருப்பினும் ஈரமான காற்றோட்டம் அடுத்த இரண்டு நாட்களுக்கு தொடரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது,அத்தோடு பலத்த காற்று மற்றும் இடியுடன் கூடிய மழை பொழியலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
பிலிப்பைன்ஸின் மேற்கில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வடமேற்கு திசையில் தெற்கு சீனாவை நோக்கி நகர்வதால், இந்த மோசமான வானிலை ஏற்பட்டதாக மலேசிய வானிலை ஆய்வு மையம் முன்னதாக தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.